திருவாரூர், மே 12: திருவாரூர் நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் காரணமாக விபத்துக்கள் மற்றும் சிறுவர்கள், முதியோர்களுக்கு அச்சுறுத்தல்கள் இருந்து வருவதால் நகராட்சி நிர்வாகம் சாலைகளில் நாய்கள் திரிவதை தடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். 30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகராட்சி பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி சுமார் 15 ஆயிரம் குடியிருப்புகளில் 58 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். தற்போது திருவாரூர் நகரம் மாவட்ட தலைநகரம் என்பதால் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் என நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர்கள் வரையில் இந்த நகரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறு ஒரு லட்சம் பேர் வரையில் இந்த நகரத்தை பயன்படுத்தி வந்தாலும் இவர்களில் பெரும்பாலானோர் வாகனங்களில் சென்று வரும் பட்சத்தில் நகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து சாலைகளில் அங்குமிங்கும் ஒன்றோடு ஒன்று விரட்டிக்கொண்டு சுற்றித் திரிவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் இந்த நாய்கள் காரணமாக விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இது மட்டுமின்றி தற்போது பெரும்பாலானவருக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருந்து வருவது மட்டுமின்றி தற்போது வரையில் இந்த நோய் இல்லாதவர்களும் காலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
மேலும் இந்த நடைபயிற்சிக்காக நகரில் தனியாக இடம் இல்லாத நிலையில் நகரை சுற்றி இருந்து வரும் தேரோடும் 4 வீதிகள் மற்றும் கமலாலய குலத்தின் 4 வீதிகள் மற்றும் ஒரு சில வீதிகள் போன்றவைகளையே தங்களது நடை பயிற்சிக்கு பயன்படுத்தி வரும் நிலையில் இந்த இடங்களிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதால் நடைப்பயிற்சி செல்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சாலையில் தனியாக விளையாடி வரும் குழந்தைகள் மற்றும் பள்ளிகளுக்கு சென்று வரும் குழந்தைகள் ஆகியோருக்கும், முதியோர்களுக்கும் அச்சுறுத்தல்கள் இருந்து வருவதால் நகராட்சி நிர்வாகம் இந்த தெரு நாய்களின் நடமாட்டம் மற்றும் இனபெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருவாரூர் நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் சிறுவர்கள், முதியோர் பாதிப்பு appeared first on Dinakaran.