தஞ்சாவூர், மே12: தஞ்சாவூர் மாவட்டம் உள்பட டெல்டா மாவட்டங்களில் மின் மோட்டார் உதவியுடன் கோடை நெல் சாகுபடி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விவசாய தேவைக்காக மும்முனை மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மும்முனை மின்சாரம் சரிவர கிடைக்காததால் நடவு வயல்கள் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இன்றி கருகும் பயிர்களை காப்பாற்ற தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டெல்டா மாவட்டங்களில் கோடை சாகுபடி பயிர்களை காப்பாற்ற 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது உள்ள சூழ்நிலையில் மின்சாரம் எப்போது வருகிறது. எத்தனை மணிநேரம் கொடுக்கிறார்கள் என்ற தகவல் தெரியவில்லை. எனவே டெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை தமிழக அரசு அந்தந்த பகுதி மின் வாரியம் மூலம் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
The post டெல்டா பகுதியில் விவசாய தேவைக்காக மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தை அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.