×
Saravana Stores

வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்: பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை: பொது சுகாதாரத்துறை தரப்பில் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

* ‘க்யூலக்ஸ்’ வகை கொசுக்களால் மனிதர்களுக்கு பரவுகிறது
* 80% பேருக்கு அறிகுறி தென்படுவது இல்லை

சென்னை: கேரளாவில் வேகமாக பரவி வரும் வெஸ்ட் நைல் வைரஸ் நோய் தாக்கம் தொடர்பாக தமிழக மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது ‘வெஸ்ட் நைல்’ எனப்படும் புதுவகையான வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில தினங்களாக இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஆலப்புழா, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இருப்பினும், வைரஸ் பரவல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும், அதேசமயம் கவனமுடன் இருக்கவும் கேரள அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் தொடர்பாக பொதுமக்கள் தற்காத்துக்கொள்வதற்கு தமிழக சுகாதாரத்துறை தரப்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் வைரஸ் நோய்யின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும், பிறகு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகின்றன. ஆனால் இது மனிதரிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு நேரடியாக பரவுவதில்லை. இந்த வைரஸ் உகாண்டா நாட்டில் வெஸ்ட் நைல் மாவட்டத்தில் கடந்த 1937ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80 சதவிகித மனிதர்களுக்கு அறிகுறிகள் காணப்படுவதில்லை. இது தவிர, வெஸ்ட் நைல் வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒன்று என்பதால், 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு எளிதில் தாக்கக்கூடும். இந்த நோய் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, மேற்கு ஆசியா பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. இந்த நோய் ‘‘எலைசா’’ மற்றும் ‘‘ஆர்டி பிசிஆர்’’ பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

நோய் தொற்று சந்தேகப்படும் நபர்களிடமிருந்து பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டு தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையம் புனேயில் பரிசோதனை செய்ய வசதி உள்ளது. இந்த காய்ச்சல் பரவினால் பொதுமக்கள் பீதியடைய வேண்டியதில்லை. அதேபோல், காய்ச்சலுக்கான உரிய சிகிச்சையை மருத்துவர் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், காய்ச்சலினால் ஏற்படும் நீரிழப்பினை தவிர்த்திட போதியளவு நீர் மற்றும் திரவ உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இதுமட்டுமல்லாது, கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* அறிகுறிகள்
வெஸ்ட் நைல் வைரஸ் என்பது க்யூலக்ஸ் வகை கொசுக்களால் பரவும் நோயாகும். காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்ற அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும். மேலும், ஒரு சிலருக்கு கடுமையான அறிகுறிகளான அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், உணர்வின்மை, வலிப்பு, தசை பலவீனம், பக்கவாதம் மற்றும் மூளை காய்ச்சல் ஏற்படும். அதன்படி, வெஸ்ட் நைல் வைரஸ் நோய் அறிகுறிகள் இருப்பின் மூளை காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உடையவர்களை பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.

தற்காத்து கொள்வது எப்படி?
* வீடுகளை சுற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
* நீர் தேங்காமல் இருந்தல்.
* ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்று இதற்கு தடுப்பு ஊசிகள் இல்லை எனவே உடனடி சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* உடல் முழுவதும் மறைக்கும் ஆடை அணிய வேண்டும்.
* கொசுவலை, கொசு விரட்டிகளை பயன்படுத்த வேண்டும்
* சுயமாக சிகிச்சை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்
* கூடுதல் தகவலுக்கு 104 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்ணை பயன்படுத்தி கொள்ளலாம்.

The post வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்: பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை: பொது சுகாதாரத்துறை தரப்பில் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : West Nile virus outbreak ,Public Health Department ,Chennai ,Tamil Nadu ,Kerala ,Dinakaran ,
× RELATED பட்டாசுகளை திறந்த இடத்தில் வெடிக்க...