×

மோடி ஓய்வு பெற்றுவிடுவார் பாஜ வென்றால் அமித்ஷா தான் பிரதமர்: கெஜ்ரிவாலின் அதிரடி பேச்சால் அரசியல் களத்தில் பரபரப்பு

புதுடெல்லி: அடுத்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி 75 வயது ஆனதும் பிரதமர் மோடி ஓய்வு பெற்று விடுவார். எனவே பா.ஜ வென்றால் அமித்ஷாதான் பிரதமராவார் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் தன்னை அமலாக்கத்துறை அமைப்பு கைது செய்தது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து திகார் ஜெயிலில் இருந்து கெஜ்ரிவால் வெளியில் வந்தார். நேற்று காலை டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது அவரது மனைவி சுனிதா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங், சஞ்சய் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். இதையடுத்து நேற்று பிற்பகல் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் முதல்வர் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கடுமையான கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் இங்கு கூடியுள்ள அனைத்து மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் தேர்தலுக்கு முன்பாக விரைவில் சிறையில் இருந்து வருவேன் என முன்னதாக தெரிவித்திருந்தேன். அதன்படியே தற்போது கடவுள் அருளால் வந்துள்ளேன். ஆம் ஆத்மி என்ற நமது கட்சி சிறியது. மிகவும் இளமையான கட்சி ஆகும். ஆனால் நம் தலைவர்கள் பலரை பாஜ விசாரணை அமைப்புகளை வைத்து பொய்யான வழக்குகளை சித்தரித்து சிறைக்கு அனுப்பியது. ஆம் ஆத்மி என்ற கட்சியை பாஜ அழிக்க நினைக்கிறது. அது ஒரு காலத்திலும் நடக்காது. குறிப்பாக பிரதமர் மோடி ஆம் ஆத்மி கட்சியை திட்டமிட்டு நசுக்க பார்க்கிறார். உண்மையை கூற வேண்டும் என்றால் நமது பிரதமரின் ஒரே குறிக்கோள் ஒரு நாடு-ஒரே தலைவர் என்பது மட்டுமே ஆகும். அதனால் தான் பிற கட்சி தலைவர்களை சிறைக்கு அனுப்பும் நடவடிக்கையை அவர் துரிதமாக செய்து வருகிறார்.

நாட்டின் பல மாநிலத்தில் ஆட்சி செய்யும் எதிர்கட்சிகளின் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பும் நடவடிக்கைகளை பாஜ அரசு தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள தலைவர்களை திட்டமிட்டு பழிவாங்கி வருகிறார். இதில் எதிர்கட்சிகளை மட்டும் பிரதமர் மோடி பழிவாங்கவில்லை. பாஜவின் மூத்த தலைவர்களையே அவர் திட்டமிட்டு பழிவாங்கி கட்சியில் இருந்து ஓரங்கட்டி உள்ளார். பல்வேறு பாஜ மூத்த தலைவர்களின் அரசியல் வாழ்வுக்கு ஓய்வு அளித்த பிரதமர் மோடிக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி 75 வயது எட்டுகிறது. அப்படியெனில் அவரும் கட்சி விதிகளின் அடிப்படையில் ஓய்வு பெறுவாரா?. குறிப்பாக பா.ஜ.வில் 75 வயது என அரசியல் பதவிக்கு வரம்பு நிர்ணயம் செய்த மோடி அதனை பின்பற்றுவாரா? என்றால் தற்போது அது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களே உங்களுக்கு ஒரு உண்மையை நான் இந்த நேரத்தில் சொல்ல கடமை பட்டுள்ளேன். நீங்கள் தற்போது வாக்கு சேகரிப்பது என்பது நீங்கள் பிரதமராக வர வேண்டும் என்பதற்காக கிடையாது. ஏனெனில் அடுத்த ஆண்டு நீங்கள் ஓய்வு பெற்று விடுவீர்கள். எனவே அமித்ஷாவை பிரதமராக்க வேண்டும் என்பதற்காக வாக்கு சேகரித்து வருகிறீர்கள். அப்படியானால் மோடியின் வாக்குறுதிகளை அமித்ஷா எப்படி நிறைவேற்றுவார்?. பா.ஜ இந்த முறை வெற்றி பெற்றால் மம்தா, தேஜஸ்வி, பினராய், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இதனை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். ஆனால் இவை எதுவும் நடக்காது. இந்த மக்களவை தேர்தலில் அதிகப்படியான இடங்களை பிடித்து இம்முறை இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

சிறையில் இருந்து விடுதலையாகி வந்த இந்த 20 மணி நேரத்தில் தேர்தல் நிபுணர்கள் பலரிடம் நான் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினேன். அவர்களும் இந்த தேர்தலில் பா.ஜ வெற்றிபெறப்போவது இல்லை என்று தெரிவித்து விட்டனர். இந்த கெஜ்ரிவாலை பொறுத்தமட்டில் பிரதமர் பதவியோ, முதல்வர் பதவியோ எனக்கு ஒரு பொருட்டு கிடையாது. மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொள்ளுபவன் நான். ஆனால் அதற்கு எதிராக கொள்கைகளை கொண்டது உங்களது பாஜ அரசு ஆகும். இந்த முறை ஒட்டு மொத்த மாநிலங்களையும் சேர்த்து பாஜ 220 முதல் 230 இடங்களில் மட்டுமே வெல்லும். இதுவே ஒரு உத்தேச எண்ணிக்கை தான். இதில் இருந்து குறையலாமே தவிர, அதிகமாக வாய்ப்பு கிடையாது. இந்த நேரத்தில் பிரதமர் மோடிக்கு நான் நேரடியாக ஒரு சவாலை விடுகிறேன். இந்த முறை ஆட்சி அமைப்பது இந்தியா கூட்டணி தானே தவிர, கண்டிப்பாக நீங்கள் கிடையாது. அதனை மனதில் வைத்துக் கொண்டு நடந்து கொள்ளுங்கள்.

ஆம் ஆத்மி கட்சியை பாஜ பலமுறை வீழ்த்த சதி செய்துள்ளது. குறிப்பாக எங்களது எம்.எல்.ஏக்களை குதிரை பேரத்தால் விலைப்பேசி வாங்க நினைத்தார்கள். ஆனால் பாஜவின் வலையில் அவர்கள் சிக்கவில்லை. என்னையும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீழ்த்த முடியவில்லை. அதன் உச்சபட்ச கோபமாக தான் என் மீது வழக்கு தொடுத்துள்ளார்கள். நீங்களும் விரைவில் விசாரணை அமைப்புகளின் வளையத்திற்குள் ஒரு நாள் வருவீர்கள். அதனை மறந்து செயல்பட வேண்டாம். பா.ஜவுக்கு அனைத்து மாநிலங்களிலும் சரிவு தான் ஏற்பட்டுள்ளது. அது உங்களுக்கே தெளிவாக தெரியும். ஆனால் அதனை நீங்கள் மறைத்து, அச்சத்தில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறீர்கள்.என்னை பொறுத்தவரையில் நான் தனியாக நின்று போராட வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் நாட்டின் 140 கோடி மக்களும் எனக்கு ஆதரவாக நிற்பார்கள்.

தற்போது நடப்பது என்பது கெஜ்ரிவாலுக்கும், பிரதமர் மோடிக்கும் நடக்கும் சண்டை கிடையாது. நாட்டு மக்களுக்கும், உண்மைக்கு எதிரான சர்வாதிகாரத்திற்கும் இடைே ய நடக்கும் சண்டை ஆகும். இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார். இதையடுத்து நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தை முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கினார். அவருடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் இணைந்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது,’ இது ஒரு வரலாற்று தருணம். வரலாறு ஒரு திருப்பத்தை எடுக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், நாட்டின் திசையும் தலைவிதியும் மாறும். சர்வாதிகாரத்திற்கு எதிராக நான் எனது முழு சக்தியுடன் போராடுகிறேன்.

எனக்கு உங்கள் ஆதரவு தேவை. நாடு எந்த சர்வாதிகாரியையும் ஏற்றுக் கொள்ளவில்லை, மக்கள் அவர்களை அகற்றவில்லை. சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட உங்கள் ஆதரவைப் பெற நான் வந்துள்ளேன். ஜூன் 4ம் தேதி மோடி பிரதமராக இருக்க மாட்டார். கர்நாடகா, அரியானா என எல்லா இடங்களிலும் அவர்கள் தோல்வியை சந்தித்து வருகிறார்கள். டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் ஒரு இடம் கூட கிடைக்காது. சிறையிலிருந்து வெளிவந்த பிறகு நேராக உங்களிடம் வந்துள்ளேன். டெல்லி மக்களை நான் மிகவும் தவற விட்டேன். எனக்கு பிரார்த்தனை செய்து ஆசிர்வாதம் அனுப்பிய கோடிக்கணக்கான மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ என்று பேசினார்.

* உபி முதல்வர் யோகியின் அரசியல் வாழ்வை மோடி முடிப்பார்
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறும்போது,’ அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களின் அரசியல் வாழ்வையே முடித்து வைத்தவர் தான் பிரதமர் மோடி. அதே போல் சிவராஜ்சிங் சவுகான், வசுந்தரா, மனோகர்லால் கட்டார், ராமன்சிங் ஆகியோரின் அரசியல் வாழ்க்கையையும் ஒரே நொடியில் முடிவுக்கு கொண்டு வந்தவர் தான் மோடி. இதில் தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தலில் மோடி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தின் அரசியல் வாழ்வையும் கண்டிப்பாக முடித்து விடுவார். இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அதனால் தான் இருவருக்கும் தொடர்ந்து பனிப்போர் நடந்து வருகிறது’ என்றார்.

* 021 நவம்பரில் டெல்லி அரசு புதிய கலால் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
* இந்த வழக்கில் துணைமுதல்வராக இருந்த சிசோடியா, சஞ்சய்சிங், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
* மார்ச் 21ல் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு மே 10ல் ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் ஜூன் 2ல் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பாஜ ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மோடியே பிரதமராக தொடருவார்: கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதிலடி
மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் மீண்டும் நரேந்திரமோடியே பிரதமராக தொடருவார் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரசாரத்தில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், அடுத்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதியுடன் பிரதமருக்கு 75வயது ஆகப்போகிறது. பாஜவில் 75வயதானவர்கள் ஓய்வு பெறுவார்கள் என்ற விதியை அவர் தான் உருவாக்கினார். பிரதமர் மோடி அமித் ஷாவுக்காக தான் வாக்குசேகரிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது நிறுவனம் மற்றும் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணிக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், மோடிக்கு 75வயது ஆனாலும், நீங்கள் மகிழ்ச்சியாக உணரவேண்டிய அவசியம் இல்லை. பாஜவின் அரசியலமைப்பில் எதுவும் எழுதப்படவில்லை. மோடி அவரது பதவி காலத்தை நிறைவு செய்வார். நாட்டை தொடர்ந்து வழிநடத்துவார். இதில் பாஜவுக்கு எந்த குழப்பமும் இல்லை” என்றார்.அதே போல் பாஜ தலைவர் ஜே.பி.நட்டா, ‘மோடியை எதிர்கொள்ள எதிர்க்கட்சி கூட்டணிக்கு கொள்கையும், திட்டமும் இல்லை.

தோல்வியை உணர்ந்த கெஜ்ரிவாலும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் இப்போது நாட்டை தவறாக வழிநடத்துவதில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். மோடியின் வயதுக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி பேசுகிறார்கள். பாஜவின் அரசியலமைப்பில் வயது தொடர்பான எந்த விதியும் இல்லை. மோடிதான் எங்கள் தலைவர், எதிர்காலத்தில் எங்களைத் தொடர்ந்து வழிநடத்துவார்’ என்றார். ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில்,’ மோடியின் தலைமையில் தான் பாஜ தேர்தலில் போட்டியிடுகிறது. அவர் மூன்றாவது முறையாக பிரதமராகி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்வார். இதுபற்றி பாஜவிலோ, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ அல்லது மக்கள் மத்தியிலோ எந்தக் குழப்பமும் இல்லை. மோடி பாஜவின் இதயத்தில் இருக்கிறார்’ என்று கூறினார்.

The post மோடி ஓய்வு பெற்றுவிடுவார் பாஜ வென்றால் அமித்ஷா தான் பிரதமர்: கெஜ்ரிவாலின் அதிரடி பேச்சால் அரசியல் களத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Amitsha ,Modi ,Baja ,Kejriwal ,New Delhi ,Delhi ,Chief Minister ,Amitshah ,Bajaj ,
× RELATED 2029ம் ஆண்டிலும் மோடியே பிரதமராக...