×

விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 150 ஏக்கர் பயிர்கள் நாசம்; மதுரை, திருச்சியில் கனமழை மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி: சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் வேனுடன் சிக்கிய மாற்றுத்திறனாளிகள்


மதுரை: மதுரை, திருச்சியில் பெய்த கனமழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரில் வேனுடன் சிக்கிய மாற்றுத்திறனாளிகள் மீட்கப்பட்டனர்.  தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இயல்பை தாண்டி 100 டிகிரி முதல் 110 டிகிரி வரை கொளுத்தியது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மதுரையில் நேற்று மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. 2வது நாளாக நேற்று மதியம் மதுரை நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதில், மதுரை ஆரப்பாளையம் வழியாக சிம்மக்கல் வரும் ரோட்டில் உள்ள கர்டர் பாலம் எனப்படும் ரயில்வே சுரங்கபாதை மழை நீரால் நிரம்பியது.

அப்போது பாலத்தின் கீழ் பகுதியில் சென்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பாடகர்கள் குழுவின் வாகனம் மதியம் 3 மணியளவில் பழுதாகி தண்ணீரில் சிக்கிக் கொண்டது. அதில் இருந்த 5 பேரும் தண்ணீருக்குள் சிக்கிக் கொண்டனர். அப்போது அங்கிருந்தவர்களின் உதவியுடன் 2 பேர் மட்டும் தண்ணீரில் இருந்து உடனடியாக மீட்கப்பட்டனர். மற்ற 3 பேரும் தண்ணீர் அதிகமாக இருப்பதால் வாகனத்திற்குள்ளேயே இருந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 3 பேரையும் பத்திரமாக கைத்தாங்கலாகவும், நடக்க முடியாதவர்களை தோளில் தூக்கியபடியும் மீட்டு வந்தனர். அவர்கள் வந்த வேன் கயிறு கட்டி மிகுந்த போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் மீட்பு பணிகள் நடந்தன.

பலத்த காற்று வீசியதால் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள நேரு நகர் பகுதியில் புங்கைமரம் மின் கம்பம் மீது சாய்ந்தது. இதனால் இந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் உள்ள சித்திரை வீதிகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது. மேற்கு கோபுரம் பகுதியில் காலை முதலே 100க்கும் மேற்பட்ட வெளி மாநில பக்தர்கள் அமர்ந்து இருந்த இடங்கள் முழுவதும் தண்ணீரில் மிதந்தது. கோயில் வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதனை ஊழியர்கள் அகற்றினர். மதுரை டிவிஎஸ் நகர் துரைசாமி சாலையில் மழையால் அறுந்து கிடந்த மின்கம்பி மீது டூவிலரை ஏற்றியதில் அதே பகுதியை சேர்ந்த தம்பதி முருகேசன் – பாப்பாத்தி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதேபோல், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு 150 ஏக்கர் பயிர்கள் நாசமடைந்தன. ராமேஸ்வரம் தீவில் நேற்று காலை முதல் தீவு முழுவதும் வானம் கருமேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், மதியம் திடீரென மிதமான கோடை மழை பெய்தது. பாம்பன் தங்கச்சிமடம் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றனர். திருச்சி மாநகரில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு வானில் கருமேகங்கள் திரண்டு திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் ஓரளவு வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதுடன் நள்ளிரவில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. நேற்று காலை 10 மணி முதல் லேசான சாரல் மழை பெய்தது.

11 மணியளவில் திருச்சி ஜங்ஷன், சத்திரம் பேருந்து நிலையம், ரங்கம், திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு இடியுடன் பலத்த மழை பெய்தது. பெருகமணி, பெட்டவாய்த்தலை, அந்தநல்லூர், திருப்பராய்த்துறை, அணலை, கொடியாலம், புலிவலத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் 600 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தது. இதற்கிடையே, சூறைக்காற்றுடன் பெய்த மழையால் அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மல்லியம்பத்து கொசவந்திடல் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்வி (48) மல்லியம்பத்து நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி ராதிகா (44) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மீட்ட நாய்க்குட்டியை கொஞ்சி மகிழ்ந்த பெண்
சுரங்க பாலத்தில் இருந்து மீட்கப்பட்ட 5 மாற்றுத்திறனாளிகள், தங்களுடன் ஒரு நாய்க்குட்டியையும் கொண்டு சென்றனர். 5 பேரோடு, நாய்க்குட்டியும் பத்திரமாக மீட்கப்பட்டது. மீட்ட நாய்க்குட்டியை மாற்றுத்திறனாளி பெண் கொஞ்சி மகிழ்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 150 ஏக்கர் பயிர்கள் நாசம்; மதுரை, திருச்சியில் கனமழை மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி: சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் வேனுடன் சிக்கிய மாற்றுத்திறனாளிகள் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district, Virudhunagar ,Madurai, Trichy ,Madurai ,Trichy ,Tamil Nadu ,Virudhunagar, Ramanathapuram district ,PWD ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...