* நாடு முழுவதும் இதுவரை 100 பேர் சிக்கினர்
* அடுத்தடுத்து அம்பலமாகும் மோசடிகள்
பாட்னா: பீகாரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேர்வு எழுதிய 4 மாணவர்கள் உட்பட அவர்களது பெற்றோர், குடும்பத்தினர் என 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த 5ம் தேதி நடந்தது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மாணவர்கள் நியாயமான முறையில் நீட் தேர்வை எதிர்கொள்ளும் நிலையில், சில வடமாநிலங்களில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு தொடர்பான முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நீட் தேர்வையொட்டி நடந்த முறைகேடுகள் தொடர்பாக சுமார் 100 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி ஆள் மாறாட்டம் செய்து தேர்வை எழுத வைப்பது, தேர்வறை கண்காணிப்பு பணிக்கு வரும் ஆசிரியரே மோசடி கும்பலுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுவது என புதுப்புது வழிகளில் முறைகேடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பீகாரில் நடந்திருக்கும் மற்றொரு மோசடி அம்பலமாகி உள்ளது. நீட் தேர்வு நடந்த ஒருநாளுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பீகார் மாநில அரசுப்பணி போட்டித் தேர்வுகளில் மோசடி செய்து கைதாவனரான சிக்கந்தர் யடவேந்து (56) என்பவர், தற்போது இந்த விவகாரத்திலும் கைதாகி உள்ளார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நீட் தேர்வு நடப்பதற்கு ஒருநாள் முன்பாக மே 4ம் தேதி பாட்னா பைபாஸ் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் காலியாக உள்ள 2 மாடி வீட்டில் சுமார் 35 நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அந்த வீட்டில் வைத்து நீட் தேர்வு வினாத்தாள் தந்து அதற்கான பதிலும் தரப்பட்டுள்ளது. இரவு முழுக்க மாணவர்கள் பயிற்சி எடுத்து மறுநாள் தேர்வு எழுதி உள்ளனர். தேர்வு தொடங்கும் முன்பாக இதுதொடர்பான தகவல் அறிந்து, சிகந்தர் யடவேந்து மற்றும் அவரது கார் டிரைவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோர், உறவினர்கள் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கூறினர். தற்போது இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணையில் எடுத்து விசாரிக்கப்படுகின்றனர்.
The post வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நீட் தேர்வர்கள், குடும்பத்தினர் உட்பட 13 பேர் பீகாரில் கைது appeared first on Dinakaran.