×
Saravana Stores

எஸ்எஸ்எல்சியில் தாய், மகள் தேர்ச்சி மகளை விட தாய் 5 மதிப்பெண் அதிகம்

மணப்பாறை: மணப்பாறை அருகே தாய் மற்றும் மகள் ஒரே நேரத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினர். இதில் மகளை விட தாய் 5 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சி அடைந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வடக்கு சேர்பட்டியை சேர்ந்தவர் தும்மாயி(37). 9ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், இதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் யோகேஸ்வரி. இவர் தாய் வேலை பார்க்கும் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தும்மாயி இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வு எழுத விருப்பப்பட்டார். இது தெரிந்த வடக்கு சேர்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அவருக்கு ஊக்கம் அளித்தனர்.

இதையடுத்து தும்மாயி மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். காலை பள்ளிக்கு சென்று உணவை தயார் செய்து மாணவர்களுக்கு கொடுத்துவிட்டு, பின்னர், பயிற்சி பள்ளிக்கு சென்று படித்துவிட்டு மாலை வீடு திரும்புவார். கடந்த மார்ச் மாதம் யோகேஸ்வரி 10ம் வகுப்பு தேர்வு எழுதினார். மகளுடன் தனித்தேர்வராக தும்மாயியும் தேர்வு எழுதினார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தும்மாயி 500க்கு 358 மதிப்பெண்களும், யோகேஸ்வரி 353 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றனர்.

தும்மாயி மகளை விட 5 மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், படிப்பு மீது எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. கடந்த 2006ல் 9ம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். குடும்ப சூழலால் படிப்பை நிறுத்தி விட்டேன். பின்னர் திருமணம் ஆனது. காலை உணவு திட்டத்தில் பணியாற்றி வந்த நிலையில் மீண்டும் படிக்க விருப்பம் ஏற்பட்டது. இதனால் தனியார் பயிற்சி பள்ளியில், குடும்ப சிரமங்களுக்கு இடையே படித்து 10 வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. என்னை ஊக்குவித்த பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றி என்றார்.

 

The post எஸ்எஸ்எல்சியில் தாய், மகள் தேர்ச்சி மகளை விட தாய் 5 மதிப்பெண் அதிகம் appeared first on Dinakaran.

Tags : SSLC ,Manaparai ,Thummai ,North Serpatti ,Trichy district ,
× RELATED மணப்பாறை அருகே காணாமல் போன இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு