ஆந்திரா: ஆந்திராவில் தவிடு மூட்டைகளுக்கு மத்தியில் பெட்டி பெட்டியாக வைத்து கடத்தப்பட்ட ரூ.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் வரும் 13-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு அரசியல் கட்சிகள் சட்ட விரோதமாக பணம், பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பறக்கும் படைகள் மற்றும் பல இடங்களில் போலீஸார், ஐடி, வருவாய் அதிகாரிகள் என பலதரப்பட்ட குழுவினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒவ்வொரு கன்டெய்னரிலும் ரூ.500 கோடி வீதம் 4 கன்டெய்னர் லாரிகளில் ரூ.2,000 கோடி பணம் இருந்தது. இது தொடர்பாக லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தியதில், இவை அனைத்தும் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து, ஹைதராபாத் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறினர். இதனை தொடர்ந்து ஐடி அதிகாரிகளுக்கு போலீஸார் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஐடி அதிகாரிகள் அந்த 4 லாரிகளையும் தங்களின் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இதற்கான ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்த பின்பு பணம் ரிசர்வ் வங்கியில் இருந்து, ஹைதராபாத் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின்பு போலீசாரின் உதவியுடன் பணம் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டது. இந்தநிலையில் இன்றைய தினம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அனந்தபள்ளியில் வேன் மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான மினி வேனை போலீசார் சோதனையிட்டபோது தவிடு மூட்டைகளுக்கு மத்தியில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திராவில் இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓயும் நிலையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
The post ஆந்திராவில் தவிடு மூட்டைகளுக்கு மத்தியில் பெட்டி பெட்டியாக வைத்து கடத்தப்பட்ட ரூ.7 கோடி பறிமுதல்..!! appeared first on Dinakaran.