டெல்லி : ஜாமீனில் விடுதலையான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று தொடங்க உள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா அமர்வு கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கும் அனுமதி வழங்கி உள்ளது. இதன் எதிரொலியாக நேற்று இரவு திகார் சிறையில் முதல்வர் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
பிரச்சாரம் மேற்கொள்ளும் முன்பு, இன்று காலை 11.30 மணி அளவில் டெல்லியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதாவுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். பிற்பகல் 1 மணி அளவில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை கெஜ்ரிவால் சந்திக்கிறார். தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு தெற்கு டெல்லியில் நடைபெறும் ரோடு ஷோவில் கெஜ்ரிவால் பங்கேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தெற்கு டெல்லியில் நடைபெற உள்ள வாகன பேரணியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கலந்து கொள்கிறார். தொடர்ந்து 4 கட்ட தேர்தல்களிலும் பரப்புரையை மேற்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். இறுதியாக தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு, ஜூன் 2ம் தேதி கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் : டெல்லியில் நடைபெறும் வாகன பேரணியில் பங்கேற்கிறார்!! appeared first on Dinakaran.