×

தமிழக மக்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே 14 வரை வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா தகவல் : எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

சென்னை: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே 14 வரை வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா தகவல் அளித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம், நமது கிரகத்தைச் சுற்றி வரும் பெரிய விண்கலம் ஆகும். விண்வெளியில் நாசா உடன் இணைந்து பல்வேறு நாடுகள் அமைத்துள்ள இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் 13 முறை பூமியை சுற்றி வருகிறது. மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த மையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை சென்னையில் இருந்து வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று நாசா அறிவித்திருந்தது. நேற்றிரவு 7.09 மணி முதல் வெறும் கண்களால் 7 நிமிடங்களுக்கு வானில் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச விண்வெளி மையம் மிகவும் பிரகாசமாக இருக்கும் காரணத்தால், இதை வெறும் கண்களால் பார்க்க முடியும். இதனால் நேற்று ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் வானத்தை ஆவலுடன் பார்த்தபடி இருந்தனர். ஏற்கனவே அறிவித்தபடி 7.09 மணிக்கு மேல் வெளிச்ச புள்ளியாகவும், சற்று நீண்ட கோடாகவும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை பார்க்க முடிந்தது. சென்னையின் பல இடங்களில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் கடந்து செல்வதை மக்கள் பார்த்து ரசித்தனர்.

இந்த நிலையில், கோவையில் இருந்து சென்னை வரை இருக்கும் மாவட்ட மக்கள் மே 14ம் தேதி வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பார்க்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது. கோவை, உதகை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் மக்கள் வெறும் கண்ணால் விண்வெளி மையத்தை பார்க்கலாம் என்றும் மே 12 காலை 4.14, இரவு 7.07, மே 13 காலை 5, மே 14 காஜை 4.14 மணிக்கு விண்வெளி மையத்தை காணலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

The post தமிழக மக்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே 14 வரை வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா தகவல் : எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? appeared first on Dinakaran.

Tags : NASA ,Tamil Nadu ,International Space Exploration Center ,CHENNAI ,International Space Station ,
× RELATED சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை...