கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மண்பரிசோதனை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் நடைபெற்று வரும் மண்மாதிரி சேகரிக்கும் முகாம்களில் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறுமாறு கந்தர்வகோட்டை வோண்மை உதவி இயக்குநர்(பொ) அன்பரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
கந்தர்வகோட்டை வட்டாரத்தில் நடப்பு 2024-25ம் ஆண்டிற்கான தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் தச்சங்குறிச்சி, கோமாபுரம், அரியாணிப்பட்டி, கோவிலூர், பல்லவராயன்பட்டி, நெப்புகை மற்றும் ஆத்தங்கரைவிடுதி ஆகிய பஞ்சாயத்துகளில் மண்மாதிரி சேகரிக்கும் முகாம் நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகள் இந்த மண்மாதிரி முகாம்களில் கலந்துகொண்டு தங்களின் சாகுபடி நிலத்தில் மண்மாதிரிகளை சேகரம் செய்து மண்பரிசோதனை செய்திட தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மண் மாதிரிகள் குடுமியான்மலை மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு மண் பரிசோதனை முடிவுகள் பெறப்படும்.மேலும், மண் பரிசோதனை ஆய்வு முடிவுகளை பெற்று அதனடிப்படையில் சாகுபடிக்கு தேவையான உரங்களை தேவையான அளவு இடுவதன் மூலம் உர செலவு குறைகிறது. மகசூலும் அதிகரிக்கப்படுவதுடன் மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது. பேரூட்ட சத்துக்கள் மட்டுமில்லாமல் மண்ணில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்களின் அளவையும் தெரிந்துகொண்டு உரம் இடுவதால் பயிரின் வளர்ச்சி சீராகவும், மகசூல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த மண் சேகரிப்பு முகாமின்படி நேற்று கோவிலூர் கிராமத்தில் மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) சங்கரலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குநர் அன்பரசன் வேளாண்மை அலுவலர் விக்னேஷ் துணை வேளாண்மை அலுவலர் வெற்றி செல்வன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கர், காளிதாஸ் மற்றும் ரெகுநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
கந்தர்வகோட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் நடைபெற்று வரும் மண்மாதிரி சேகரிக்கும் முகாம்களில் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறுமாறும் கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
The post கந்தர்வகோட்டை வட்டாரத்தில் மண் பரிசோதனை செய்ய விவசாயிகள் அழைப்பு appeared first on Dinakaran.