டெல்லி : மக்கள் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியுடன் பொது வெளியில் விவாதிக்க தயாராக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் குற்றச்சாட்டுகள், சவால்கள் குறித்து பொதுவெளியில் விவாதிக்க வருமாறு முன்னாள் நீதிபதிகள் பிரதமர் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நிலையில் லக்னோவில் நடைபெற்ற அரசியல் அமைப்பு பாதுகாப்பு மற்றும் நீதி மாநாட்டில் உரையாற்றிய ராகுல் காந்தி, சகோதரர்களுக்குள் சண்டையை மூட்டிவிட பிரதமர் மோடி முயற்சிப்பதாகவும் ஆனால் மக்கள் தற்போது அதை புரிந்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மோடி பிரதமராக மாட்டார் என்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்தால் மட்டுமே பிரதமராக முடியும் என்றும் அவர் கூறினார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள் உள்ளிட்ட 90% மக்களை புறக்கணித்துவிட்டு, 10% இருப்பவர்களை கொண்டு எப்படி நாடு வல்லரசாக முடியும் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, பொது விவாதத்திற்கு தாம் தயாராக உள்ளதாகவும் மோடி விவாதத்திற்கு வருவாரா என்றும் கேள்வி எழுப்பினார். மோடியின் செயல்பாடுகள் பிரதமர் போல இல்லை. 21ம் நூற்றாண்டின் மன்னர் போல அவர் செயல்படுவதாக விமர்சித்த ராகுல் காந்தி, நாடாளுமன்றம், அமைச்சரவை, அரசியல் அமைப்பு சட்டம் உள்ளிட்ட எதையும் அவர் மதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார். அரசியல் சாசனம் அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் அரணாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், அதனை உலகில் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
The post மக்கள் பிரச்சனைகள் குறித்து பொதுவெளியில் விவாதிக்கலாமா? நான் ரெடி..சரமாரி கேள்வியுடன் பிரதமர் மோடியை அழைக்கும் ராகுல் காந்தி!! appeared first on Dinakaran.