×

பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும் கோடை உழவு நீரை நிலத்தில் தக்க வைக்கும்

*வேளாண் துறையினர் தகவல்

அருப்புக்கோட்டை : கோடையில் பெய்யும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலங்களில் உளிக்கலப்பை அல்லது சட்டிக்கலப்பை மூலம் கோடை உழவு செய்தால் பல நன்மைகளை பெறலாம்.அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ், உதவி பேராசிரியர் முனைவர் வேணுதேவன் ஆகியோர் கூறியதாவது: கோடை உழவு செய்வதால் நாம் விவசாயம் செய்யும் நிலம் வளமாவதுடன், பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும். கோடை உழவு நீரை நிலத்தில் தக்க வைக்கும். கோடை உழவு செய்யும் போது நிலத்தின் மேட்டுப் பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி உழவு செய்ய வேண்டும்.

இரண்டாவது உழவு, குறுக்கு வசத்திலிருக்க வேண்டும். குறுக்கு உழவு செய்யாமல் நேர்கோடாக உழவு செய்தால், மழை பெய்யும்போது மேட்டுப் பகுதியில் இருக்கும் சத்துகள் தாழ்வான பகுதிக்குப் போய் மழைநீர் வீணாகிவிடும். குறுக்கு உழவு இருந்தால் சத்துகள் ஆங்காங்கே தடுக்கப்படும், மழைநீரும் பூமிக்குள் இறங்கும். கோடையில் பொதுவாக இரண்டு மழை கிடைக்கும். முதல் மழையிலேயே உழவு செய்துவிட வேண்டும்.

அப்போதுதான் இரண்டாவது பெய்யும் மழை நீரை மண்ணுக்குள் சேமிக்க முடியும். மழைக்காலத்தில் செய்யும் உழவைவிட, கோடைக்காலத்தில் செய்யும் உழவுதான் விவசாயத்திற்கு மிகவும் முக்கியமானது. மழைக்காலத்தில் போதுமான ஈரம் இருக்கும். அந்த ஈரத்தில் உழவு செய்யும்போது, மண்ணுக்குள் குளுமையான தன்மைதான் உருவாகும். ஆனால், கோடைக்காலத்தில் உழவு செய்யும்போது, வெப்பம், குளுமை இரண்டும் மண்ணுக்குக் கிடைக்கும். இப்படி இரண்டும் கிடைக்கும் போதுதான் மண்ணின் கட்டுமானம் பலப்படும்.

கோடைக்காலத்தில் செய்யும் உழவு மூலம், மண்ணில் மறைந்திருக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள், கூண்டுப்புழுக்கள் போன்றவற்றையும் எளிதில் அழிந்துவிடும். அத்துடன் மண்வளத்தை பாதிக்கும் களைச்செடிகள் மற்றும் அதன் விதைகளையும் அழித்து விடலாம். மேலும் மழை நீரானது வளி மண்டலத்தில் நிறைந்துள்ள நைட்ரேட் என்ற வேதிப்பொருளுடன் இணைந்து மண்ணில் உள்ள தழைச்சத்தினை அதிகரிக்கச் செய்யும்.

விளை நிலத்தின் மேல் மண்வளம் பாதுகாக்க கோடை உழவு அவசியமாகும். பொதுவாக, காற்றுவெளியில் நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஏராளமான சத்துகள் இருக்கும். நீண்ட காலத்துக்குப் பிறகு பெய்யும் முதல் மழையில் அந்தச் சத்துகள் கலந்து பூமிக்கு வரும். கோடை உழவு செய்து வைத்த மண்ணில் இந்தச் சத்துகளைச் சேமிக்க முடியும். தொடர்ந்து அடுத்தடுத்து கிடைக்கும் மழையில் வளிமண்டலத்திலிருந்து மழையோடு பூமியில் இறங்கும் சத்துகளை மண்ணில் சேமிக்கலாம்.

மழைக்காலத்தில் உழவு செய்யும்போது, ஈரப்பதம் இருப்பதால் சாதாரண உழவாக இருக்கும். கோடையில்தான் ஆழமாக உழ முடியும். கோடை உழவிற்கு பிறகு சாகுபடி போதிய நீர்ப்பாசன வசதி உள்ளவர்கள் வாய்ப்புள்ள இடங்களில் சிறுதானியங்கள், உளுந்து, பாசிப்பயறு, பருத்தி, நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்தால் நல்ல லாபம் பெறலாம். இவ்வாறு கூறினர்.

மண்புழுக்கள் அதிகமாகும்

கோடை உழவு செய்யும்போது நிலத்தில் விவசாயிகளின் நண்பனான மண்புழுக்கள் அதிகம் காணப்படும். ஒரு வயலில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கோடை உழவு செய்தால், அந்த நிலத்தில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு சிறந்த வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுக்கிறது கோடை உழவு. வேர் பகுதியில் வாழக்கூடிய அத்தனை நுண்ணுயிர்களுக்கும் தேவையானவை கிடைத்துவிடும்.

The post பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும் கோடை உழவு நீரை நிலத்தில் தக்க வைக்கும் appeared first on Dinakaran.

Tags : Aruppukkottai ,Science Station ,Dr. ,Ms.… ,Dinakaran ,
× RELATED காரைக்கால் மாவட்டத்தில் உளுந்து...