*வேளாண் அதிகாரி எச்சரிக்கை
திண்டுக்கல்/பழநி : திண்டுக்கல் மாவட்டத்தில் உரங்கள் போதிய இருப்பு உள்ளது எனவும், காலாவதியான உரங்களை விற்றால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் வேளாண் துறை தரக் கட்டுப்பாடு உதவி இயக்குநர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், தகவல் மற்றும் தர கட்டுப்பாடு பிரிவின் கீழ் விவசாயிகளுக்கு சரியான விலையில், சரியான அளவில், உரங்கள் சரியான நேரங்களில் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்யும் பொருட்டு, அவ்வப்போவது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி வட்டாரத்தில் உள்ள உர சில்லறை விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆய்வுக்குப் பின் வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்ததாவது:
உரக் கடைகளில் யூரியா, டிஏபி, பொட்டாஷ் உர மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உர ஆய்வகத்துக்கு அனுப்பி தரங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். இதில் தரம் குறைவாக விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மாவட்டத்தில் பயிர் சாகுபடி செய்யும் பருவம் துவங்கியுள்ளதால் உரம் இருப்பு கண்காணிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு அனைத்து உரக் கடைகளில் மொத்த மற்றும் சில்லறை கடைகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு சரியான அளவு தேவையான அளவு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தோம்.
மேலும் தற்போது மாவட்டத்தில் யூரியா உரம் 8337 டன், டிஏபி உரம் 1554 டன், பொட்டாசு உரம் 1816 டன், காம்ப்ளக்ஸ் உரம் 9 916 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 877 டன் இருப்பு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொத்த கடைகள் மற்றும் சில்லறை கடைகளில் சரியான விலையில் விற்கப்படுவதை கண்காணித்து வருகின்றோம்.
தனியார் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை மையங்களில் இருப்பு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யக் கூடாது. விவசாயிகளுக்கு உரிய முறையில் பட்டியலிடப்பட்டு ரசீது வழங்கப்பட வேண்டும். தடை செய்யப்பட்ட அல்லது காலவதியான பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யக் கூடாது. விற்பனை உரிமங்கள் விவசாயிகள் பார்வையில் தெரியுமாறு கடையில் வைக்க வேண்டும். விலை பட்டியல் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
அனுமதி இல்லாத உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யக் கூடாது. இவ்விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் மீது உரக்கட்டுப்பாட ஆணை 1985 மற்றும் பூச்சிச்கொல்லி சட்டம் 1968ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆய்வின்போது தொப்பம்பட்டி வேளாண்மை அலுவலர் அப்துல் காதர் ஜெய்லானி உடன் இருந்தார்.
The post திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய இருப்பு உள்ளது காலாவதி உரம் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் appeared first on Dinakaran.