நெல்லை : வாகன ஓட்டிகளை வெயில் கொடுமையில் இருந்து பாதுகாக்க கொக்கிரகுளத்தில் மாநகராட்சி சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசி வருகிறது. பகல் வேளையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தினமும் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகிறது. வெப்ப அலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசும் பொதுமக்களை பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெளியே நடமாட வேண்டாம் எனக்கேட்டு கொண்டுள்ளது.
இந்நிலையில் மாவட்டங்கள் தோறும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக சிக்னல்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிக்னல்களில் காத்திருக்கும் பயணிகள் சற்று இளைப்பாறி கொள்ள இத்தகைய பந்தல்கள் அமைக்கப்படுகின்றன. நெல்லை மாநகராட்சி சார்பில் கொக்கிரகுளம் எம்ஜிஆர் சிலை அருகே சிக்னலில் நேற்று காலை முதல் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள், பகல் பொழுதில் அதிக வெயிலை தவிர்க்கும் வகையில் இந்த பசுமை பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து ஒரு நிமிடம் இளைப்பாறி செல்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மாலை நேரத்தில் லேசாக தூறல் மழை தலைக்காட்டும் நிலையில், பசுமை பந்தல்கள் பகல் பொழுதில் வாகன ஓட்டிகளுக்கு சற்று நிம்மதியை தருகின்றன. இத்தகைய பந்தல்களை குறிச்சி ரிலையன்ஸ் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் அமைத்து தர வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் விருப்பமாக உள்ளது.
The post வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து பாதுகாக்க கொக்கிரகுளம் சிக்னலில் பசுமை பந்தல் அமைப்பு appeared first on Dinakaran.