×
Saravana Stores

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தண்ணீர் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி

*கர்ப்பிணிகள் சாலை மறியல் – பரபரப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், இதர நோயாளிகள் உள்ள சுமார் 1000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக சுமார் 1000 பேர் என மொத்தம் அரசு மருத்துவமனையில் 2000 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதிப்பட்டு வந்தனர்.

கழிவறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் கழிவறைகளை பயன்படுத்த முடியாமல் கடந்த மூன்று நாட்களாக அவதிப்பட்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த 20க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மருத்துவமனை எதிரே கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10.45 மணியளவில் சாலையின் குறுக்கே மரக்கட்டைகளை போட்டு திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கர்ப்பிணி தாய்மார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர். அதனையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தண்ணீர் பிரச்னை குறித்து போலீசார் விசாரணை செய்ததில் மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் சம்பு அமைக்கப்பட்டுள்ளன. அதில் மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் விநியோகம் தடைபட்டதாகவும் தெரியவந்துள்ளது. அதனையடுத்து காவல்துறையினர் முயற்சியால் உடனடியாக இரண்டு டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு மருத்துவமனை வார்டு பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.

மருத்துவமனையில் தண்ணீர் விநியோகம் செய்ய டெண்டர் எடுத்த தனிநபர், மோட்டார் பழுதானதற்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது இதனால் கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகள் அவதிப்பட்டுள்ளனர். தண்ணீர் பிரச்னையால் கர்ப்பிணி தாய்மார்கள் சாலை மறியல் செய்த விவகாரம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தண்ணீர் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kallakurichi Government Hospital ,Panaparpu ,Kallakurichi ,Kalalakurichi Government Hospital ,
× RELATED அரசு பள்ளியில் புறக்கணிப்பதாக கூறி...