திருக்கோவிலூர் : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த புறவழிச் சாலை பகுதியில் திருவண்ணாமலை-திருச்சி சாலையில் நேற்று மதியம் லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை பக்கத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. பின்னர் அருகில் இருந்தவர்கள் லாரி ஓட்டுனரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவல் அறிந்த திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாலாஜி, உதவி ஆய்வாளர் நந்தகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததில், லாரி ஓட்டுநர் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் (63)என்பதும். இவர் கடந்த ஐந்து வருடமாக அரசு மதுபான குடோன்களுக்கு லாரியில் மதுபானம் ஏற்றிக் கொண்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் வழக்கம் போல் மன்னார்குடி பகுதியில் உள்ள தனியார் மதுபான ஆலையிலிருந்து சுமார் ரூ.32 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை ஏற்றிக்கொண்டு மன்னார்குடியில் இருந்து திருவண்ணாமலை அரசு மதுபான குடோனுக்கு ஏற்றி வந்துள்ளார்.அப்போது திருக்கோவிலூர் புறவழிச் சாலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது .இதனால் மதுபானங்கள் அதிக அளவில் உடைந்ததால், சம்பந்தப்பட்ட அரசு மதுபான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் மதுபான ஆலையிலிருந்து அரசு மதுபான குடோன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடைந்த மதுபானங்களை அகற்றிவிட்டு மற்றொரு வாகனத்தில் போலீசார் பாதுகாப்போடு மதுபானங்களை ஏற்றினர்.
இந்த விபத்தில் மதுபானம் ஏற்றி வந்த லாரி முற்றிலும் பாதுகாப்பாக தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டதால் மதுபானங்கள் லாரியில் இருந்து வெளியே வரவில்லை இதனால் பொதுமக்களுக்கு மதுபானம் ஏற்றி வந்த லாரி என்பது தெரியவில்லை பின்னர் சுமார் 8 மணி அளவில் மதுபானங்களை வேறு ஒரு லாரிக்கு மாற்றும் போது உடைந்த மதுபானங்கள் வாசனை பரவியதால் அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடியது. பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் உடைந்த மதுபானங்களின் மதிப்பு சுமார் 5 லட்சம் வரை இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
The post திருக்கோவிலூர் அருகே மதுபானம் ஏற்றி வந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.