*4 மணிநேரம் தாமதமாக வந்த வாரணாசி ரயில்
விழுப்புரம் : தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாகவும், அவரை எதிர்த்து விவசாயிகள் போட்டியிட உள்ளதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார். அதன்படி பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட அய்யாக்கண்ணு தலைமையில் 136 விவசாயிகள் நேற்று திருச்சியில் இருந்து வாரணாசி ெசல்ல ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தனர்.
அதன்படி நேற்று கன்னியாகுமரியில் இருந்து வாரணாசி வரை இயக்கப்படும் காசி தமிழ்சங்கமம் விரைவு ரயிலில் முன்பதிவு செய்திருந்த 36 பேருக்கு மட்டும் இருக்கை உறுதியானதாகவும், மற்ற விவசாயிகள் காத்திருப்போர் பட்டியலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து திருச்சியில் ஏறிய அவர்கள் தஞ்சாவூரில் தங்களுக்கு இருக்கை வசதியை ஏற்படுத்தக்கோரி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் விழுப்புரத்தில் இருக்கை வசதி செய்து தருவதாக கூறிய நிலையில் தொடர் போராட்டம் காரணமாக காலை 8.25 மணிக்கு வரவேண்டிய ரயில் பிற்பகல் 12 மணியளவில் விழுப்புரத்திற்கு வந்தடைந்தது.
தொடர்ந்து இங்கும் இருக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்காததால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு தனிப்பெட்டியை ஏற்படுத்தி கொடுக்கவும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், விழுப்புரத்தில் தனிப்பெட்டி வசதி கிடையாது.
அரக்கோணத்தில் விவசாயிகளுக்காக தனிப்பெட்டியை இணைத்து செல்ல ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தனர். அதன்பின்னர் சுமார் 4 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
The post அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி அய்யாக்கண்ணு போராட்டம் appeared first on Dinakaran.