திருவாரூர், மே 11: வலங்கைமானில் தனியார் பள்ளி ஆசிரியரிடம் தாலி செயினை பறித்து சென்ற வழக்கில் பட்டுக்கோட்டையை சேர்ந்த 2 வாலுபர்களை போலீசார் கைது செய்தனர். வலங்கைமான் தாலுகா ஆலங்குடி பகுதியில் வசித்து வருபவர் சிலம்பரசன் மனைவி சித்ரா (32). இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த மாதம் 23ம் தேதி பள்ளி முடிந்து மாலை 6 மணி அளவில் தனது ஸ்கூட்டி பைக் மூலம் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது செம்மங்குடி என்ற இடத்தில் பின்னால் பைக்கில் முகத்தை மூடியவாறு வந்த 2 வாலுபர்கள் திடீரென சித்ராவின் கழுத்தில் கிடந்த தாலி செயினை அறுத்துள்ளனர். இதனால் நிலை தடுமாறிய சித்ரா சுதாரித்துக் கொண்டு செயினை ஒரு கையால் பிடித்த போது அதில் இரண்டரை பவுன் எடை கொண்ட ஒரு பகுதியை மட்டும் மர்ம நபர்கள் அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக வலங்கைமான் போலீசில் சித்ரா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவரும் பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மகேஷ் மகன் ராஜேஷ் (24) மற்றும் லட்ச தோப்பு பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் மகன் மதன் (22) என்பது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று தேடியபோது அங்கு குற்றவாளிகள் இல்லாமல் தலைமறைவாக இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவர்கள் வலங்கைமான் தாலுகா ஆலங்குடி பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்ததன் பேரில் நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டரை பவுன் எடையிலான செயினையும் பறிமுதல் செய்தனர். சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கோபிநாத் தலைமையிலான போலீசாரை எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டியுள்ளார்.
The post வலங்கைமானில் ஆசிரியையிடம் செயின் பறித்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.