நாகப்பட்டினம்,மே11: நாகப்பட்டினத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில் கொடுமையில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. இதனால் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதலில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடை வெயில் சதம் அடித்து வருகிறது. இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து அக்கரைப்பேட்டை வழியாக – வேளாங்கண்ணி செல்லும் அக்கரைப்பேட்டை ரயில்வே கேட் பூட்டப்படுவதால் பல மணி நேரம் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் நிற்கின்றனர். கோடை வெயிலின் போது இவ்வாறு பல மணி நேரம் நிற்பதால் சிலர் மயக்கம் அடையும் நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு கோடை வெயில் கொடுமையில் சிக்கித் தவித்து வரும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து வாகன ஓட்டிகளுக்கு நிழல் தர வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் சார்பில் அக்கரைப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் இரண்டு புறமும் மிக நீண்ட தூரத்திற்கு பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பசுமை பந்தல் அமைக்கப்பட்டதால் பகல் நேரங்களில் ரயில்வே கேட் பூட்டியிருக்கும் போது வெயிலின் கொடுமை தெரியாமல் வாகன ஓட்டிகள் தங்களது இரண்டு சக்கர வாகனங்களுடன் நிற்கின்றனர். பசுமை பந்தல் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
The post சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க பசுமை பந்தல் அமைப்பு appeared first on Dinakaran.