- சிபிசிஎல்
- Panangudi
- பொலிஸ் பாதுகாப்பு
- நாகப்பட்டினம்
- CPCL
- நாகூர்
- சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
- நாகூர், நாகப்பட்டினம் மாவட்டம்
- 5 மாவட்ட போலீஸ் பாதுகாப்பு
- தின மலர்
நாகப்பட்டினம், மே 11: நாகூர் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்திற்கு 5 மாவட்ட போலீசார் பாதுகாப்புடன் நிலம் அளவீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே பனங்குடியில் பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் (சிபிசிஎல்) எண்ணை ஆலை உள்ளது. இந்த ஆலையின் விரிவாக்க பணிக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.31 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோபுராஜபுரம், நரிமணம், முட்டம், பனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 620 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நிலம் வழங்கியவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு சட்டத்தின்கீழ் கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள் பனங்குடியில் கடந்த 1ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். கடந்த 10 நாட்களாக பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதனால் சிபிசிஎல் நிறுவனம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டதாக கூறி மண்ணை வாரி தூற்றி நேற்று (10ம் தேதி) 10வது நாளாக போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிபிசிஎல் எண்ணை நிறுவனத்தை கண்டித்து தங்களது வாய், வயிற்று பகுதிகளில் அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனிடையே சிபிசிஎல் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த மற்றொரு தரப்பை சேர்ந்த விவசாயிகள் சிபிசிஎல் நிறுவனம் காலதாமதம் இன்றி பணிகளை தொடங்கி நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறி போராட்டம் நடத்தினர். அப்போது வருவாய் கோட்டாட்சியர் அரங்கநாதன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நேற்று நிலத்தை அளவிடும் செய்யும் பணி தொடங்கியது. இதற்காக நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி ஹர்ஷ்சிங் தலைமையில் 4 ஏடிஎஸ்பிக்கள், 10 டிஎஸ்பிக்கள், 20 இன்ஸ்பெக்டர்கள் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, நாகப்பட்டினம் என 5 மாவட்டங்களிலிருந்து 650க்கும் மேற்பட்ட போலீசார் பனங்குடியில் குவிக்கப்பட்டனர்.
காலவரையற்ற போராட்டம் நடத்துவோர்கள் பந்தலை விட்டு வெளியேறாதவாறு இரும்பாலான தடுப்பு கட்டைகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நில அளவை தனி தாசில்தார் சக்கரவர்த்தி தலைமையில் 4 தாசில்தர்கள், வருவாய்த்துறையினர் 4 குழுக்களாக பிரிந்து வெவ்வேறு இடங்களில் நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கியது. இதில் வட்ட துணை ஆய்வாளர்கள், விஏஓக்கள், நில அளவையாளர்கள் என 48க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்திய நிலத்தை சுற்றி 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலம் அளவிடும் பணியில் ஈடுபட்டனர். நிலம் அளவீடு செய்த பின்னர் சுற்றுச்சுவர் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. விவசாயிகள் சிபிசிஎல் நிறுவனத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கி இருப்பது பனங்குடியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மறு வாழ்வு மற்றும் மீள்குடியமர்வு சட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் கட்டுமான பணிகளை தொடங்கினால் தமிழகம் முழுவதும் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.
The post 5 மாவட்ட போலீஸ் பாதுகாப்புடன் பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு நிலம் அளவிடும் பணி: வாழ்வாதாரத்தை அழித்துவிட்டதாக இடம் கொடுத்தவர்கள் கண்ணீர், கதறல் appeared first on Dinakaran.