×

தமிழ்நாடு முழுவதும் அட்சய திருதியை ஒட்டி நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது

* அதிகாலை முதல் நள்ளிரவு வரை கடைகள் திறப்பு
* ஒரே நாளில் 3 தடவை உயர்ந்து சவரனுக்கு ரூ1240 எகிறியது

சென்னை: அட்சய திருதியை ஒட்டி தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை கடைகள் திறக்கப்பட்டிருந்தன. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 3 முறை உயர்ந்து, சவரன் ரூ 54,160-க்கு விற்பனையானது. அதே நேரத்தில் இந்தாண்டு அட்ச திரிதியை ஒட்டி சுமார் 14 ஆயிரம் கோடிக்கு நகைகள் விற்பனையாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3வது திருதியையான வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளியினால் செய்யப்பட்ட ஆபரணங்கள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அதன்படி நேற்று காலை 4.17 மணிக்கு அட்சயதிரிதியை தொடங்கியது.

இன்று (சனிக்கிழமை) மதியம் 2.50 மணி வரை அட்சயதிருதியை இருக்கிறது. மேலும் நேற்று, இன்று, நாளை என 3 நாட்கள் அட்சயதிருதியையே கொண்டாட நகைக்கடைக்காரர்கள் முடிவு செய்திருந்தனர். அதன்படி அட்சய திருதியை ஒட்டி நகைக்கடைகள் தமிழகம் முழுவதும் நேற்று அதிகாலையே திறக்கப்பட்டன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒவ்வொரு நகைக்கடைகள் முன்பாக மேளதாளங்கள் முழங்கவும், செண்டை மேளம் வரவேற்பும் அளிக்கப்பட்டன. சிவப்பு கம்பளம் விரிந்து வாடிக்கையாளர்கள் வரவேற்கப்பட்டனர். கடைகள் முன்பாக அலங்காரத் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதனால் அனைத்து நகைக்கடைகளும் மின்னொலியில் ஜொலித்தன. அதிகாலையில் கடைகளைத் திறந்த உடன் நகைகள் வாங்க மக்கள் வரத்தொடங்கினர். இதனால், கடைகளைத் திறந்த சிறிது நேரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதே நேரத்தில் நேற்று தங்கத்தின் விலை 3 தடவை உயர்ந்தது.

ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ரூ1240 உயர்ந்தது. தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த போதிலும், விலையை பொருட்படுத்தாமல் நகை பிரியர்கள் நகைகளை வாங்கிச் சென்றனர். தமிழகத்தில் சுமார் 40 ஆயிரம் சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 6 ஆயிரம் நகைக்கடைகள் உள்ளன. குறிப்பாக, சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, வடபழனி, குரோம்பேட்டை, பாடி, தாம்பரம் உட்பட பல இடங்களில் உள்ள நகைகடைகள் நேற்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டன. காலை முதலே நகைக்கடைகளில் மக்கள் கூட்டத்தை அதிகமாக காணமுடிந்தது. நேரம் ஆக, ஆக நகைகள் வாங்க ஏராளமான பெண்கள் குவிந்தனர்.
அட்சயதிரிதியை அன்று நகைக்கடைகளில் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் பெரும்பாலானோர் கடந்த 15 நாட்களுக்கு முன்பே 25% பணத்தை செலுத்தி முன்பதிவு செய்திருந்தனர்.

அவர்கள் நேரடியாக நகைக்கடைகளுக்கு சென்று மீதமுள்ள பணத்தை செலுத்தி தாங்கள் ஏற்கெனவே தேர்வு செய்து வைத்திருந்த நகைகளை எந்தவித சிரமமும் இன்றி வாங்கினர். முன்பதிவு செய்யாதவர்கள் காத்திருந்து நேற்றைய விலைக்கு தங்கத்தை தேர்வு செய்து வாங்கிச் சென்றனர். தங்க நாணயம் வாங்க நகைக்கடைகளில் தனியாக கவுன்டர்கள் அமைக்கப்பட்டு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அவர்கள் வரிசையில் சென்று தங்க நாணயங்களை வாங்கினர். அட்சயதிரிதியைக்கு செய்கூலி, சேதாரத்தில் சிறப்புத் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வேறு அளிக்கப்பட்டிருந்தது. புது, புது டிசைன்களில் தங்க நகைகள் விற்பனைக்காக வந்திருந்தது. எடை குறைவான நெக்லஸ், பேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் உள்பட பல விதமான நகைகள் விற்பனைக்கு வந்திருந்தது. அதேபோல வைர நகைகளும் பல்வேறு டிசைன்களில் அதிக அளவில் வந்திருந்தது.

இதில், தங்களுக்குப் பிடித்த நகைகளை தேர்வு செய்து மகிழ்ச்சியுடன் வாங்கினர். இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் கூறியதாவது: கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் நடந்தது. தேர்தல் நடத்தை அமலில் இருந்தால் 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பணத்தை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தேர்தல் சமயத்தில் நகைக்கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நகை வாங்க முடியாதவர்கள் அட்சயதிரிதியை அன்று நகைகளை வாங்கி கொள்ளலாம் என்று காத்திருந்து தற்போது நகைகளை வாங்கினர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு நகை விற்பனை 15 முதல் 20 சதவீதம் வரை கூடுதலாக விற்பனையானதாக தெரியவருகிறது. கடந்த ஆண்டு அட்சயதிரிதியை அன்று 20 டன் அளவுக்கு தங்கம் விற்பனையானது. தமிழகத்தில் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை விற்பனையானது.

இந்த ஆண்டு சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை விற்பனையாகும் என்று எதிர்ப்பார்க்கிறோம். ஏனென்றால் 3 நாட்கள் அட்சயதிருதியை சலுகையை வழங்க உள்ளோம். இதனால், நகை விற்பனை என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று வரை அட்சயதிருதியை வருவதால் இன்று காலையும் கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னையில் உள்ள நகைக்கடைகள் அனைத்தும் நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு 1 மணி வரை திறந்திருந்தது. இரவு நேரத்தில் நகைகள் வாங்க வந்த வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பாக அவர்களின் இல்லத்திற்கே கொண்டு சென்று விடும் வகையில் ஒவ்வொரு கடைக்காரர்களும் வாகன வசதி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 முறை உயர்ந்த தங்கம்
தங்கம் விலை நிர்ணயம் என்பது ஒவ்வொரு நாளும் காலை, மாலை என 2 முறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். சில சமயம் காலையும், மாலையிலும் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்படும். கடந்த சில மாதங்களாக காலையில் தங்கம் என்ன விலையில் விற்பனையாகிறதோ அதே விலையில்தான் மாலையிலும் தங்க நகைகள் விற்பனையாகி வந்தது. ஆனால், அட்சயதிரிதியையான நேற்று அதிகாலை 4.35 மணியளவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டது. அதில் தங்கம் விலை நேற்றைய முன்தினம் விலையை விட சவரனுக்கு ரூ360 உயர்ந்து ஒரு சவரன் ரூ52,800க்கு விற்கப்பட்டது.

தொடர்ந்து காலை 8.16 மணியளவில் 2வது முறையாக தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டது. அதில் அதிகாலை விலையே விட தங்கம் விலை சவரனுக்கு ரூ360 உயர்ந்து காணப்பட்டது. தொடர்ந்து பகல் 2.57 மணியளவில் 3வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. அதில் தங்கம் விலை சவரனுக்கு ரூ520 உயர்ந்து சவரன் ரூ 54160-க்கு விற்கப்பட்டது. நேற்று மட்டும் தங்கம் விலை 3 முறை உயர்ந்தது. அதாவது, நேற்று ஒரே நாளில் ஒரு சவரன் ரூ1240 வரை உயர்ந்தது. அட்சய திருதியை என்பதால் விலை அதிகரித்திருந்த போதிலும் மக்கள் மகிழ்ச்சியுடன் நகைகளை் வாங்கி சென்றதைக் காண முடிந்தது.

The post தமிழ்நாடு முழுவதும் அட்சய திருதியை ஒட்டி நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Akshaya Trithi ,Chennai ,
× RELATED அட்சய திருதியை ஒட்டி, ஒரு சவரன் ரூ.1,240...