சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளிகளில் 13ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்றும், விடைத்தாள் நகல் பெற 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. அதனுடன் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வசதியாக தற்காலிக மதிப்பெண்களை வழங்கவும் தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் 13ம் தேதி முதல் தங்களின் தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். அல்லது http://dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தங்கள் பிறந்ததேதி மற்றும் பதிவெண்களை பதிவு செய்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித் தேர்வர்களும் மேற்கண்ட இணைய தளத்தில் நோட்டிபிகேஷன் என்ற பகுதியில் சென்று Provisional Certification பக்கத்தில் தங்களின் பிறந்த தேதி மற்றும் பதிவெண்ணை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் பெற…
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரும் மாணவர்கள் முதலில் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்து பெற்ற விடைத்தாள் நகலை ஆய்வு செய்து, பின்னர் தேர்வுத்துறையால் அறிவிக்கப்படும் நாளில் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மட்டுமே மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ275 செலுத்த வேண்டும்.
The post விடைத்தாள் நகலை பெற 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 13ம் தேதி முதல் பெறலாம் appeared first on Dinakaran.