×

திருவான்மியூரில் கழுத்து அறுத்து பெண் கொலை பக்கத்து வீட்டு சிறுவன், 2 நண்பர்களுடன் கைது: மது அருந்த, கஞ்சா புகைக்க தடையாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்

துரைப்பாக்கம், மே 11: திருவான்மியூரில் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டு சிறுவன், தனது 2 நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார். மது அருந்த, கஞ்சா புகைக்க தடையாக இருந்ததால், தீர்த்துக்கட்டியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். திருவான்மியூர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (40), கார்பென்டர். இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். மாமியார் பொன்னி (58), வீட்டில் தான் ஐயப்பன் வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்றதால், வேறு வழியின்றி வயதான மாமியாரையும் கவனித்துக் கொண்டு அங்கேயே ஐயப்பன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம் போல ஐயப்பன் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பினார். அப்போது, கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மாமியார் பொன்னி கழுத்து அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்ததும் ஐயப்பன் அதிர்ச்சியடைந்தார். உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பொன்னி இறந்து விட்டார்.

தகவலறிந்து வந்த திருவான்மியூர் போலீசார், பொன்னி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். ஐயப்பனிடம் விசாரித்த போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுவன்தான் அடிக்கடி மாமியாரிடம் சண்டை போட்டு வந்ததாக கூறியுள்ளார். அதனால் சிறுவனை தேடி போலீசார் வீட்டுக்கு சென்றனர். அவன் எதுவுமே தெரியாதது போன்று இருந்தான்.

இதையடுத்து அவனை பிடித்து கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். அப்போது கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் வருமாறு: 17 வயது சிறுவன். தனியார் நிறுவனத்தில் பொருட்கள் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறான். இவனது பெற்றோர் காலையில் வேலைக்கு சென்று, மாலையில்தான் வீடு திரும்புவார்கள். தங்கை பள்ளியில் படித்து வருகிறார். சிறுவன், வேலைக்கு சென்றால் மதியம் வீட்டுக்கு வந்து விடுவான். பின்னர் நண்பர்களை வரவழைத்து மது அருந்துவது, கஞ்சா புகைப்பது, பெண்களை அழைத்து வந்து ஜாலியாக அரட்டை அடிப்பது, வீட்டின் வெளியே பொது வெளியில் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.

இதை பக்கத்து வீட்டில் வசித்து வரும் பொன்னி கண்டித்துள்ளார். மேலும் அவரது பெற்றோரிடமும் கூறியுள்ளார். இதன் காரணமாக, சிறுவன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளான். நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். தங்கை அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். சிறுவனும் வேலைக்கு சென்று விட்டு, மதியம் நண்பர்களுடன் மது அருந்தி, கஞ்சா புகைத்துள்ளான். இதை பார்த்து வழக்கம்போல பொன்னி கண்டித்துள்ளார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே, ஆத்திரமடைந்த சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து பொன்னியின் வீட்டுக்குள் சென்று காய்கறி வெட்டும் கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இவ்வாறு போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 17வயது சிறுவன் மற்றும் அவனது நண்பர்களான தினகரன் (21), விக்னேஷ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருவான்மியூரில் கழுத்து அறுத்து பெண் கொலை பக்கத்து வீட்டு சிறுவன், 2 நண்பர்களுடன் கைது: மது அருந்த, கஞ்சா புகைக்க தடையாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Thiruvanmiyur ,Ambalam ,Durai Pakkam ,Ranganathapuram ,
× RELATED திருவான்மியூர் பாம்பன் சுவாமி...