மும்பை: கேபின் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 75 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. நாளை முதல் விமானங்கள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேபின் ஊழியர்கள் திடீர் விடுப்புகள் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமானங்களை இயக்க விமானிகள், பொறியாளர்கள் இல்லாத காரணத்தால், 170 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் விமான பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர். இதையடுத்து கேபின் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து தொழிற்சங்கத்துக்கு நிர்வாகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில், இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஒரு பிரிவினர் நேற்றுமுன்தினம் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று ஊழியர்கள் பற்றாக்குறையால் நேற்று 75 விமான சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ரத்து செய்தது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ செவ்வாய்கிழமையில் இருந்து இதுவரை 260 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரூ.30 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.நாளை முதல் வழக்கம் போல் விமான சேவை நடைபெறும்’’ என்றார்.
The post ஊழியர்கள் பற்றாக்குறை ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 75 விமானங்கள் ரத்து: நாளை முதல் வழக்கம் போல் விமானங்கள் இயங்கும் என அறிவிப்பு appeared first on Dinakaran.