- எங்களுக்கு
- ரஷ்யா
- வாஷிங்டன்
- அமெரிக்க அரசுத்துறை
- ரஷ்ய வெளியுறவு அமைச்சகம்
- மரியா ஜாகரோவா
- மாஸ்கோ
- குர்பதவந்த் சிங் பன்னு
- தின மலர்
வாஷிங்டன்: இந்திய தேர்தலில் அமெரிக்கா தலையிடுகிறது என்ற ரஷ்யாவின் குற்றச்சாட்டை அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். ரஷ்ய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மரியா சகாரோவா மாஸ்கோவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சீக்கிய தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கடந்த ஆண்டு அமெரிக்காவில் கொலை செய்ய நடந்த முயற்சியில் இந்தியாவின் உளவு துறைக்கு தொடர்பு இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மரியா சகாரோவா,‘‘ இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இந்தியா மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளை பற்றியும் அமெரிக்கா இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறது. இந்தியாவின் தேசிய மன நிலையை சரியாக அமெரிக்கா புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா கூறி வருகிறது. ஒரு நாடாக இந்தியாவை அவமதிக்கும் செயல். இந்தியாவில் உள்நாட்டு அரசியல் சூழ்நிலையை சமநிலைப்படுத்தாமல் தேர்தலை சிக்கலாக்குவதே அமெரிக்காவின் நோக்கம். இந்திய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை அந்நாட்டின் அறிக்கை தெளிவாக எடுத்துக் காட்டி உள்ளது’’ என்றார். இது பற்றி அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லரிடம் கேட்டபோது, “நிச்சயமாக இல்லை. இந்திய தேர்தலில் நாங்கள் தலையிடவில்லை. அது இந்திய மக்கள் எடுக்க வேண்டிய முடிவு. இந்தியா மட்டுமல்ல, உலகின் எந்த நாட்டுத் தேர்தல் விவகாரத்திலும் நாங்கள் தலையிடுவதில்லை என்றார்.
* இந்தியாவின் பதிலில் திருப்தி
அமெரிக்காவில் சீக்கிய தீவிரவாதி மீது நடந்த கொலை முயற்சி சம்பவத்தில் இந்தியா அளித்த பதில் திருப்திகரமாக உள்ளது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்தார். வாஷிங்டனில் வெளிநாட்டு உறவு கவுன்சில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எரிக் கார்செட்டி பேசுகையில்,‘‘ இந்தியாவுடனான உறவுகளில் சில தடைகள் இருக்கலாம். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கோரியிருந்த விஷயங்களுக்கு இந்தியா அளித்த பதில் திருப்திகரமாக உள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அமெரிக்கர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருந்தால் அதற்கு பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும். எங்கள் தரப்பிலிருந்து மட்டுமல்ல, இந்தியாவுக்கும் அந்த பொறுப்பு இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
The post இந்திய தேர்தலில் தலையீடா? ரஷ்யா புகாருக்கு அமெரிக்கா மறுப்பு appeared first on Dinakaran.