ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். திருப்பூரில் வெல்டிங் பட்டறை தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி வசந்தி. கமுதியில் உள்ள ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் காவிய ஜனனி கமுதியில் உள்ள ரஹ்மானியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் படித்து 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில் மாணவி காவிய ஜனனி, தமிழில் 99 மதிப்பெண்கள், பிற பாடங்களான ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் தலா 100 என 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதை கொண்டாடும் வகையில், பள்ளிக்கு தனது தாயார் வசந்தி மற்றும் சகோதரியுடன் நேற்று வந்த மாணவிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில், பட்டாசுகள் வெடித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு கேக் ஊட்டி வாழ்த்தினர். பின்னர் சொந்த ஊரான பேரையூருக்கு சென்ற மாணவிக்கு கிராம மக்கள் சார்பில் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்த மக்கள் மாணவிக்கு இனிப்பு வழங்கி வாழ்த்தினர். வறுமையிலும் சாதித்த மாணவி காவிய ஜனனி கூறும்போது, ‘‘பெற்றோர் மிகுந்த ஊக்கமளித்து படிக்க வைத்தனர். குடும்ப சூழ்நிலை கருதி தினந்தோறும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து படிப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி, அதிக மதிப்பெண் எடுக்க உறுதுணையாக இருந்தனர். மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் கலெக்டராக வருவது எனது லட்சியம்’’ என்றார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் மண்டவாடி ரோட்டுப்புதூரை சேர்ந்த மாணவி காவியஸ்ரீயா பத்தாம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரது பெற்றோர் கருப்புசாமி – ரஞ்சிதம் பாரம்பரிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். காவியஸ்ரீயா கொசவபட்டி அக்சயா அகடாமி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். இவர் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்களும் பெற்று அசத்தியுள்ளார். மாணவி காவியஸ்ரீயா கூறுகையில், “எனது தந்தை விவசாயி. எனது வெற்றிக்கு பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு கொடுத்து, இரவு பகல் பாராது கல்வி பயிலச் செய்தனர். எனது வெற்றிக்கு காரணமாக இருந்த பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோருக்கு நன்றி. கலெக்டர் ஆவது எனது கனவு மற்றும் ஆசை. அந்தக் கனவை நிறைவேற்ற தொடர்ந்து கடின முயற்சியுடன் படித்து முன்னேறுவேன்’’ என்றார். மாணவி காவியஸ்ரீயாவுக்கு பள்ளி முதல்வர் செந்தில், தாளாளர் மலர் விழிச்செல்வி இனிப்புகள், பரிசு வழங்கி பாராட்டினார்.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சஞ்சனா அனுஷ் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் தமிழில் 99, ஆங்கிலத்தில் 100, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நான்கு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ள இந்த மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இதுகுறித்து மாணவி சஞ்சனா அனுஷ் கூறுகையில், ‘எனது பெற்றோர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைக்கின்றனர். இதனால் நான் எப்படியாவது நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக நான் கடுமையாக உழைத்தேன். யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆக வேண்டும் என்கிற ஆசை எனக்கு உள்ளது. அதற்கேற்ப வருங்காலத்தில் நான் திட்டமிட்டு படித்து நிச்சயம் ஐஏஎஸ் ஆவேன்’ என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை சேர்ந்த குணசேகரன், சுதா தம்பதியின் மகள் தேவதர்ஷினி. இவர் தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த இருமத்தூர் ஐவிஎல் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். சமீபத்தில் தேர்வெழுதிய இவர், 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் பாடவாரியாக தமிழில் 99, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது பெற்றோர் இருவரும், அரசு பள்ளி ஆசிரியர்களாக பணி புரிந்து வருகின்றனர். 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து, மருத்துவராகி சேவை செய்ய விரும்புவதாக மாணவி தேவதர்ஷினி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அரூர் அருகே கவுண்டம்பட்டியை சேர்ந்த விவசாயி அன்பழகன்- ரசிகா தம்பதியின் மகள் சந்தியா. இவர் அரூரை அடுத்த தொட்டம்பட்டி ஜெயம் வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு பயின்றார். பத்தாம் வகுப்பு பொது த்தேர்வில், இவர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இது குறித்து மாணவி சந்தியா கூறுகையில், ‘12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று, வழக்கறிஞர் ஆவதே தனது லட்சியம் என தெரிவித்துள்ளார். மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் இருவரும், தங்களுக்கு ஊக்கமளித்த பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
* நரிக்குறவர் இன மாணவர்கள் 400க்கும் மேல் எடுத்து சாதனை
சிவகங்கை பழமலை நகரில் சுமார் 350 நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பிழைப்புக்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் குழந்தைகளின் கல்வி பாதித்தது. இதையடுத்து அரசு மற்றும் தொண்டு நிறுவன பங்களிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உண்டு உறைவிடப்பள்ளி தொடங்கப்பட்டது. இதில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுவதுடன், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி என்ற மாணவர் சிவகங்கையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியிலும், மற்றொரு மாணவர் தனுஷ், கேஆர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியிலும் படித்து வந்தனர். இதில் 10ம் வகுப்பு தேர்வு முடிவில், துரைப்பாண்டி 414 மதிப்பெண், தனுஷ் 412 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் நடந்த பிளஸ் 2 தேர்வில் ஒரு மாணவரும், 10ம் வகுப்பு தேர்வில் சில மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது 400க்கும் மேல் 2 மாணவர்கள் எடுத்து சாதனை படைத்ததை அப்பகுதி மக்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
* ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்த வக்கீல் ரமேஷ் யுவராஜா. இவரது மனைவி கலைராணி. இவர்களுக்கு அட்சயா(16), அகல்யா (16) என இரட்டை மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும், ராசிபுரத்தில் உள்ள வித்யா மந்திரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவிகள் அட்சயா, அகல்யா இருவரும் 500க்கு 463 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இரட்டை குழந்தைகளான இவர்கள், தேர்விலும் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளது, பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் சக தோழிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. பாடம் வாரியாக மாணவி அட்சயா தமிழில் 90, ஆங்கிலம் 95, கணிதம் 95, அறிவியல் 90, சமூக அறிவியல் 93 என 500க்கு 463 மதிப்பெண் பெற்றுள்ளர். அதே போல், அகல்யா தமிழில் 95, ஆங்கிலம் 94, கணிதம் 95, அறிவியல் 87, சமூக அறிவியல் 92 என 500க்கு 463 மதிப்பெண் பெற்றுள்ளார். ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், சக மாணவிகள் மற்றும் உறவினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்த இந்த இரட்டை சகோதரிகள் ஹரிணி, சபரிஸ்ரீ ஆகியோர் தலா 484 மதிப்பெண் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதில் மாணவி ஹரிணி தமிழில் 100க்கு 97, ஆங்கிலம் 99, கணிதம் 99, அறிவியல் 100, சமூக அறிவியலில் 89 என மொத்தம் 484 மதிபெண்களை பெற்றார். மாணவி சபரிஸ்ரீ, தமிழில் 98, ஆங்கிலம் 96, கணிதம் 95, அறிவியல் 99, சமூக அறிவியலில் 96 என மொத்தம் 484 மதிபெண்களை பெற்றார். இருவரும் பள்ளியளவில் இரண்டாமிடம் பிடித்தும் அசத்துயுள்ளனர். உருவத்தில் மட்டுமின்றி மதிப்பெண்ணிலும் ஒற்றுமை காட்டி அசத்திய மாணவிகளை தலைமை ஆசிரியர் புனிதவதி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் முத்துக்குமரன் மற்றும் அனைத்து ஆசிரியர்களும், பாராட்டினர்.
The post 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த விவசாயி, தொழிலாளியின் மகள்கள்; கலெக்டர் ஆவதே லட்சியம் என பேட்டி appeared first on Dinakaran.