×

தந்தை இறந்த சோகத்தில் தன்னம்பிக்கையை விடவில்லை

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரங்கநாதன் மகள் ரேணுகாம்பாள் என்பவர் படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இறுதி தேர்வான சமூக அறிவியல் தேர்வு நடந்த 8ம் தேதி, மாணவி ரேணுகாம்பாளின் தந்தை ஆட்டோ ஓட்டுநர் ரங்கநாதன் திடீர் உடல்நல குறைவால் உயிர் இழந்தார். தந்தை உயிரிழந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும் மனதை கடினப்படுத்திக் கொண்டு மாணவி தேர்வு எழுதினார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 236 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் மாணவி, தந்தை உயிரிழந்த சூழ்நிலையிலும் பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெற்று தற்போது மேற்படிப்பு தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பண்டாபி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த தேவன் என்பவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை தேர்வுக்கு முந்தைய நாள் இறந்தார். இருப்பினும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மனதைரியத்துடன் தேவன் எழுதினார். தேர்வு எழுதி விட்டு வந்து வினாத்தாளுடன் தேவன், தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். இந்நிலையில் நேற்று வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவில் மாணவன் தேவன் 328 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அவருக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து மாணவன் தேவன் கூறும்போது, நான் தேர்வு எழுதும்போது, தந்தை உயிரிழந்தார். தேர்வு எழுத செல்ல வேண்டாம் என பலர் தெரிவித்தனர். ஆனால் எனது தாய் கல்பனாதேவி, தேர்வு எழுத செல்ல வேண்டும் என தெரிவித்தார். நான் தேர்வு எழுதினேன். எந்த மாணவர்களும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் தேர்வு எழுதாமல் இருக்க வேண்டாம். ஒரு வருடம் வீணாக சென்று விடும் என்றார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் திபீஷ், பாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மகனை ஒரு இன்ஜினியராக பார்க்க வேண்டும் என்பது அவரது தந்தையின் கனவாக இருந்தது. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் சமூக அறிவியல் தேர்வு நாளன்று மாணவரின் தந்தை லட்சுமணன் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். தந்தை உயிரிழந்த சோகத்திலும் மனம் தளராமல் தேர்வினை திபீஷ் எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், திபீஷ் 306 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தந்த உயிரிழந்த நாளன்று எழுதிய சமூக அறிவியல் பாடத்தில் 46 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதுகுறித்து மாணவன் திபீஷ் கூறுகையில், ‘‘சமூக அறிவியல் தேர்வு நாளன்று எனது தந்தை திடீரென இறந்து விட்டார். அந்த சோகத்திலும் தேர்வு எழுதி 306 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். என் தந்தையின் ஆசைப்படி இன்ஜினியராகி அவரது கனவை நிறைவேற்றுவேன். அந்த இலக்கை அடையும் வகையில் அவர் என்னை வழி நடத்துவார்’’ என்றார்.

* அரசு பள்ளியில் படித்த கூலி தொழிலாளி மகள் ‘497’
மதுரை மாவட்டம், எழுமலையைச் சேர்ந்தவர் ஜெயராமன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் சுஸ்யா. இவர் எழுமலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் பத்தாம் வகுப்பு படித்தார். நேற்று வெளியான பொதுத்தேர்வு முடிவின்படி சுஸ்யா 500க்கு 497 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சுஸ்யாவின் சாதனையை பள்ளி தலைமையாசிரியர் வேளாங்கன்னி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உறவினர்கள் அந்தப் பகுதி மக்கள் என அனைவரும் பள்ளிக்கு வந்து பாராட்டினர். உடன் பயின்ற மாணவிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தலைமை ஆசிரியர் வேளாங்கன்னி கூறியதாவது, ‘‘சுஸ்யாவைப் போல பலரையும் உருவாக்க வேண்டும் என்பதே எங்களது லட்சியம்’’ என்றார். மாணவி சுஸ்யா கூறியதாவது, ‘‘அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் ஆங்கிலம் பேச மாட்டார்கள் என பலரும் கூறுவர். ஆனால் நான் அழகாக ஆங்கிலேயர் போல பேசுவேன். அதற்கு காரணம் பள்ளியில் ஆங்கிலத்தை அவ்வளவு அருமையாக கற்றுத் தந்தனர். பெற்றோரின் ஆசைப்படி மருத்துவர் ஆவதே எனது லட்சியம்’’ என்றார்.

* மின்சார வசதி இல்லாமல் மெழுகுவர்த்தி, விளக்கு வெளிச்சத்தில் படித்து 492 மார்க் எடுத்து மெக்கானிக்கின் மகள்
திருவாரூர் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் மாணவிகளே பிடித்துள்ள நிலையில் இதில் 492 மதிப்பெண்கள் பெற்று கொரடாச்சேரி அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா தேவி 2ம் இடம் பிடித்துள்ளார். ரடாச்சேரி பத்தூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் நான்கு சக்கர மெக்கானிக் பாலா மற்றும் சுதா தம்பதியரின் மகள் துர்கா தேவி. இவரது அண்ணன் மணிகண்டன் கொரடாச்சேரி அரசு மாதிரி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவி துர்கா தேவி தமிழ் பாடத்தில் 96, ஆங்கிலம் 100, கணிதம் 98, அறிவியல் 100, சமூக அறிவியல் 98 என 492 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மாணவி துர்கா தேவி கூறுகையில், ‘கொரடாச்சேரி பள்ளியில் 6ம் வகுப்பு முதல் படித்து வருகிறேன். ஆண்டு தோறும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வருகிறேன். இதே பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து மருத்துவராக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. எனது வீட்டில் இதுவரையில் மின்சார வசதி இல்லாததால் தொடர்ந்து சார்ஜர் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் படித்தேன். வீட்டிற்கு மின் வசதி கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில் 3 மின்கம்பங்கள் புதிதாக போடப்பட வேண்டும் என்றும் அதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரையில் செலவு ஏற்படும் என மின்துறை சார்பில் தெரிவித்து வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தனது தந்தையினால் இவ்வளவு பெரிய தொகையினை செலுத்த முடியவில்லை. எனவே வீட்டிற்கு மின்சார வசதி கொடுப்பதற்கு தமிழக அரசும், முதல்வர் மு. க ஸ்டாலினும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

* பார்டரில் பாஸ் மாணவனுக்கு கேக் வெட்டி கொண்டாடிய நண்பர்கள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த வடுவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவன், தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் என அனைவரும் கூறி வந்தனர். இந்நிலையில் 3 பாடங்களில் பார்டர் மார்க் என 500க்கு 210 மார்க் எடுத்து மணிகண்டன் பாஸ் ஆனார். தன்மீது நம்பிக்கை இல்லாத நிலையில் இருந்த மணிகண்டனை பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், நம்பிக்கை வைத்து நல்லா படித்தால் பாஸாகி விடலாம் என உற்சாகம் கொடுத்ததன் விளைவாக அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களையே கொண்டாடி வரும் நிலையில், தோல்விகளை கொண்டாடுவதும் ஒரு சாதனைதான் என்பதை உணர்ந்த அவருடைய நண்பர்கள் மாணவன் மணிகண்டனுக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி ஊட்டி விட்டு, டூ வீலரில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

* 2 கை, கால்கள் செயலிழந்தும் மாற்றுத்திறனாளி 420 மார்க்
நெல்லை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பேக்கரி கடை ஊழியரான சசிகுமார் மகன் தமிழ்ச்செல்வன், சந்திப்பு மதிதா இந்து மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். சிறு வயதில் இருந்தே இரண்டு கைகளும், கால்களும் செயலிழந்த இந்த மாணவன் சுயமாக எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலையில் இருந்து வந்தார். இருப்பினும் தமிழ்ச்செல்வன் தனக்கு ஏற்பட்ட சோதனைகளை சாதனைகளாக மாற்றி 10ம் வகுப்பு தேர்வில் 500க்கு 420 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அவரது தந்தை சசிகுமார் கூறுகையில், ‘எனது மகனால் சுயமாக எந்த வேலையும் செய்ய முடியாது. நான் சொல்ல சொல்லத் தான் அவனால் எதையும் செய்ய முடியும். அப்படி இருக்கும் மாணவன் அதிக மதிப்பெண் பெற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார். தமிழ்ச்செல்வன் கூறுகையில், ‘நான் நன்றாக படித்த காரணத்தால் இந்த மதிப்பெண் எடுக்க முடிந்தது. நான் படித்து வழக்கறிஞராக மாற வேண்டும் என்பதே எனது விருப்பம். என்னைப் போல் உள்ள மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் படித்தால் வாழ்க்கையில் வெற்றி அடையலாம், என்றார்.

The post தந்தை இறந்த சோகத்தில் தன்னம்பிக்கையை விடவில்லை appeared first on Dinakaran.

Tags : Ranganathan ,Renukambala ,Malmalayanur Government Secondary School ,Viluppuram District ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...