சென்னை: பர்மிங்காம் பல்கலைக் கழகத்துடன் இணைந்து தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு இணை முதுகலை பட்டப்படிப்பை சென்னை ஐஐடி கடந்த ஆண்டில் தொடங்கியது. தற்போது நிலையான எரிசக்தி அமைப்புகள் தொடர்பான முதுகலைப் படிப்பைத் தொடங்கியுள்ளன. இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து வழங்கும் இப் பட்டப் படிப்பை முடிக்க மாணவர்கள் சென்னையிலும் பர்மிங்காமிலும் தங்கள் கல்வியை தொடரலாம். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சிக் குழுக்களுடன் இணைந்து தனிநபர் ப்ராஜக்ட்களை மேற்கொள்வர்.
மாணவர்கள் பர்மிங்காம் அல்லது ஐஐடி மெட்ராஸில் தங்கள் படிப்பை நிறைவு செய்யும் வகையில் இப்பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பர்மிங்காமில் ஆராய்ச்சிக்கான ப்ராஜக்ட்டுடன் 12 மாதங்கள் இங்கிலாந்தில் கல்வி கற்கலாம். இங்கிலாந்தில் கல்விகற்ற பின்னர், சென்னைக்கு திரும்பி ஐஐடி மெட்ராஸில் இப்படிப்பை நிறைவு செய்யலாம். அத்துடன் ஐஐடி மெட்ராஸில் ஆராய்ச்சிக்கான ப்ராஜக்டையும் மேற்கொள்ளலாம். இப்படிப்பிற்கான விண்ணப்ப பதிவானது தொடங்கி நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://ge.iitm.ac.in/uob/sustainable-energy-systems/ என்ற இணையதள முகவரியில் ஜூன் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கல்லாம்.
இந்த பாடத்திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த பர்மிங்காம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆடம் டிக்கெல் கூறுகையில்: எங்களின் 2வது இணை முதுகலைப் படிப்பின் மூலம் இரு நாடுகளில் படிப்பதற்கு அற்புதமான புதிய வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிபுணத்துவம், தொழில்துறை இணைப்புகளின் மூலம் ஐஐடி மெட்ராஸ், பர்மிங்காம் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டுமே பயனடையும். எரிபொருள் செல்கள், ஹைட்ரஜன், எரிசக்தி சேமிப்பு, சூரிய ஒளி மற்றும் அணு மின்சக்தி உள்ளிட்ட தற்போதைய எரிசக்தி அமைப்புகளின் அடிப்படைக் கொள்கைகள் குறித்தும் மாணவர்கள் கற்றறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பர்மிங்காம் பல்கலைக் கழகத்துடன் இணைந்து எரிசக்தி அமைப்பு தொடர்பான புதிய முதுகலை படிப்பு: சென்னை ஐஐடி தொடங்கியது appeared first on Dinakaran.