×
Saravana Stores

வடலூர் சத்தியஞான சபை பெருவெளியில் உரிய அனுமதிகளை பெற்றே வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்

சென்னை: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை பெருவெளியில் அனைத்து அனுமதிகளையும் பெற்று வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணி தொடங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை முன்புள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், ‘அரசின் சர்வதேச மையம் சத்தியஞான சபையின் அருகில் கட்டப்படுவதால் பக்தர்கள் பாதிக்கப்படுவர். தொல்லியல் துறை உள்ளிட்ட துறைகளின் அனுமதியும் பெறப்படவில்லை’ என்றார். வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத் தலைவர் நாகலிங்கம் சார்பில் வழக்கறிஞர் புருஷோத்தமன் ஆஜராகி, வள்ளலாருக்கு வழங்கப்பட்டது மொத்தம் 106 ஏக்கர் நிலம். ஆனால் இப்போது 71 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மனுதாரர் கூறும் பகுதியில் 400 கடைகள் உள்ளன. அரசு கட்டவுள்ள கட்டிடங்களின் நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். கோபுரம் போன்ற அமைப்புகள் இருக்கக் கூடாது என்றார்.

அப்போது பேசிய நீதிபதிகள், வள்ளலார் தனது பாடல்களில் பெருவெளி மையம் அமைக்க கூடாது என்று குறிப்பிடவில்லை. வள்ளலாரின் பாடல் அர்த்தங்கள் தவறான பொருளில் புரிந்து கொள்ளப்படுகிறது. வேதங்களை அவர் எதிர்க்கவில்லை. வேதங்களை திருத்தி கூறுபவர்களையே வள்ளலார் எதிர்த்தார். அதனால், பாடல்களைத் தவறாகப் படித்து தவறானப் பொருள்களைப் பரப்பி வள்ளலாரின் புகழைக் கெடுக்க வேண்டாம். அரசு அமைக்கும் மையத்தால் சத்தியஞான சபைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அப்படி இருக்கும் போது தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசின் திட்டம் வள்ளலாரின் தத்துவங்களுக்கு விரோதமானவை என்று நிரூபித்தால் மட்டுமே அரசு முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும். வள்ளலார் கூறிய பெருவெளியில் தற்போது 71 ஏக்கர் நிலம் மட்டுமே பாக்கி உள்ளது.

சத்தியஞான சபையை சுற்றி சுமார் 400 கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும்போது வள்ளலாரின் பெருவெளி நிலம் பெருவெளியாகவே உள்ளது என்று எப்படி கூற இயலும். பெருவெளியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். என்றனர். 400 ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர். அதற்குப் பதில் அளித்த அரசு தரப்பு சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே வள்ளலார் சர்வதேச மையக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சத்திய ஞான சபைக்கு ஜூன் 3வது வாரத்திற்குள் அறங்காவலர் நியமிக்கப்படுவர் என்றார். அரசு தரப்பின் இந்த வாதத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை ஜூன் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post வடலூர் சத்தியஞான சபை பெருவெளியில் உரிய அனுமதிகளை பெற்றே வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Vallalar International Centre ,Vadalur Trustee Council ,Ministry of Justice Information ,Chennai High Court ,Chennai ,Foundation Department ,Vadalur Vallalar ,Satyajana Sabha ,Vadalur Satyajana ,Sabha ,Pruprabang ,Ministry of Finance Information ,
× RELATED வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது