×

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி

* அரியலூர் மாவட்டம் முதலிடம் கணிதத்தில் 20,691 பேர் சதம்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவியருக்கான முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. வழக்கமாக மாணவர்களை விட மாணவிகளே இந்த ஆண்டும் அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டின் மொத்த தேர்ச்சி விகிதம் 91.55% ஆகும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் பள்ளிகள் 12,626. இவற்றில் 7,491 பள்ளிகள் மேனிலைப் பள்ளிகள், 5134 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் ஆகும். இப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடந்தது. முன்னதாக பிப்ரவரி மாதம் 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடந்தன. பொதுத்தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவ மாணவியர் எழுதினர்.

பொதுத் தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு எழுதிய மொத்த மாணவ மாணவியரில், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 பேர் மாணவியர் அடங்குவர். இதையடுத்து, தமிழ்நாட்டில் 118 விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் விடைத்தாள்கள் பெறப்பட்டு, திருத்தும் மையங்களுக்கு ஏப்ரல் இரண்டாவது வாரம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 88 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி, சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. அறிவித்தபடி நேற்று காலை 9.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இவர்களில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்த தேர்ச்சி வீதம் 91.55%. மாணவியர் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 94.53%. மாணவர்கள் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 88.58 %. மாணவர்களைவிட மாணவியரே 5.95% அதிகம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த 10ம் வகுப்பு தேர்வில் 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 பேர் தேர்வு எழுதி 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டில் மொத்த தேர்ச்சி வீதம் 91.39% என்ற அளவில் இருந்தது. இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 4105 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளன. அரசுப் பள்ளிகளில் 1364 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் இயங்கும் பள்ளிகளை பொருத்தவரையில், அரசுப் பள்ளிகள் 87.90%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.43 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 91.93%, பெண்கள் பள்ளிகள் 93.80%, ஆண்கள் பள்ளிகள் 83.17% தேர்ச்சியை பெற்றுள்ளன. பாட வாரியான தேர்ச்சியை பொருத்தவரையில் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடத்தில் 96.85%, ஆங்கிலம் 99.15%, கணக்கு 96.78%, அறிவியல் 96.72%, சமூக அறிவியல் 95.74% எட்டியுள்ளது. தமிழ்ப் பாடத்தில் 8, ஆங்கிலம் 415, கணக்கு 20691, அறிவியல் 5104, சமூக அறிவியல் 4428 பேர் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வில் மாற்றுத் திறனாளிகள் 13,510 பேர் பங்கேற்றனர். அவர்களில் பேர் 12,491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 92.45%. சிறைவாசிகள் 260 பேர் தேர்வு எழுதி 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி வீதம் 87.69% ஆகும்.

மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 97.31% சதவீதம் தேர்ச்சியை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் 97.02% சதவீதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் 96.36% தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானதும், மாணவர்களின் செல்போன் எண்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பொது நூலகங்கள் ஆகியவற்றில் இருந்தும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், அந்தந்தப் பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்களை கணினியில் இருந்து பதிவிறக்கம் செய்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Chennai ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED மக்காச்சோள பயிரில் உருவாகும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்