×
Saravana Stores

அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

* தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம்

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட அனுமதி வழங்கி உள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மக்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சி மூத்த தலைவருமான கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த விவகாரத்தில் சஞ்சய் சிங் மட்டும் தற்போது ஜாமீனில் வௌியே உள்ளார். புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும், இடைக்கால ஜாமீன் கோரியும் முதல்வர் கெஜ்ரிவால் தொடர்ந்த மனுக்களை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவை கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்தது. மேற்கண்ட விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறை கைதை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 10ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கு விசாரணையை நேற்றைக்கு(மே.10) ஒத்தி வைத்திருந்தது. வழக்கு விசாரணையின்போது, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் முக்கிய குற்றவாளியே அரவிந்த் கெஜ்ரிவால் தான். அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது. அதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை வாதங்களாக தொடர்கிறோம் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் வாதங்களை அடுத்த வாரம் முன்வைத்து முடித்து விடுங்கள். இருப்பினும் தற்போது நாங்கள் ஒரு இடைக்காலமாக உத்தரவை பிறப்பிக்கிறோம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து மேற்கண்ட வழக்கில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், ‘‘டெல்லி மதுபான கொள்கை வழக்கு விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலமாக ஜூன் 1ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்படுகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது. ஆனால் அரசு விவகாரத்தில் தலையிடவோ அல்லது முதல்வர் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அரசின் கோப்புகளில் கையெழுத்திடும் பணிகளில் ஈடுபடக் கூடாது. இதைத்தொடர்ந்து தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் ஜூன் 2ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை அமைப்பின் மூலம் திகார் சிறையில் சரணடைய வேண்டும். மேலும் இந்த உத்தரவை காரணம் காட்டி, இதே வழக்கில் இருப்பவர்கள் யாரும் நிவாரணம் கேட்க கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

அதிகாரத்தை பயன்படுத்திய உச்ச நீதிமன்றம்
இந்த விவகாரத்தில் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றம் உட்பட எந்த ஒரு நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யவில்லை. மாறாக அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்பதே அவரது திட்டவட்டமான முக்கிய கோரிக்கையாக இருந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் விதமாக இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்: கெஜ்ரிவால் ஆவேசம்
டெல்லி திகார் சிறையில் இருந்து நேற்று இரவு வெளியே வந்த முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான ஆம்ஆத்மி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேசியதாவது: சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற நான் முழு வலிமையுடன் போராடுகிறேன். 140 கோடி மக்களும் இணைந்து சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவோம். முதலில் அனுமனை தரிசனம் செய்ய விரும்புகிறேன். அனுமனின் ஆசீர்வாதத்தால் நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன். நான் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் எனக்கு தங்கள் ஆசீர்வாதங்களை அனுப்பியுள்ளனர். , அதனால் நான் இங்கு இருக்கிறேன். உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்
* முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக் கூடாது.
* சாட்சிகளிடம் பேச கூடாது
* பிரசாரத்தின் போது வழக்கு குறித்து பேசக் கூடாது
* சிறை நிர்வாகம் குறித்தோ அல்லது நீதிமன்றங்கள் குறித்தோ எந்தவித கருத்தும் தெரிவிக்க கூடாது
* பிணைத்தொகையாக ரூ.50,000 செலுத்த வேண்டும்
* வெளி மாநிலங்களுக்கு செல்ல தடை இல்லை
* அரசு விவகாரத்தில் தலையிடவோ அல்லது முதல்வர் அதிகாரத்தை பயன்படுத்தவோ கூடாது.
* அரசின் கோப்புகளில் கையெழுத்திடும் பணிகளில் ஈடுபடக் கூடாது.

உத்தரவின் முக்கிய அம்சங்கள்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எட்டு பக்கங்களைக் கொண்ட இந்த உத்தரவில் பல முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டுள்ளது.
1 சட்டவிரோத பண பரிமாற்றச் சட்டம் 2002 பிரிவு 19 இன் கீழ் நடவடிக்கை எடுக்கும் போது விதிமீறல்கள் ஏற்படுகிறதா என்பது தொடர்பாக இந்த வழக்கில் இரண்டு தரப்பிலும் வாதங்கள் இன்னும் நிறைவடையவில்லை. எனவே இதற்கான வாதங்கள் விசாரணை பிறகு நடைபெறும்.

2 இந்த விவகாரத்தில் ஒரு குற்றப்பத்திரிகையும், இரண்டு துணை குற்ற பத்திரிகையும் சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் போதிலும், இதுவரை குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதனால் தற்போதைய சூழலில் விவகாரத்தில் இறுதி தீர்ப்பு உடனடியாக வழங்குவது என்பது இயலாத காரியமாக உள்ளது.
3 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்கும் முடிவை எடுத்திருப்பதாக உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
4இந்த நேரத்தில் விசாரணை நீதிமன்றத்திற்கு சென்று இடைக்கால ஜாமீன் பெற அரவிந்த் கெஜ்ரிவாலை அறிவுறுத்துவது சரியானதாக இருக்காது.

597 கோடி வாக்காளர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசை தீர்மானிப்பதற்கான வாக்குகளை செலுத்த இருக்கிறார்கள். இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கான மிக முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது.

6 சாதாரண குடிமக்களில் இருந்து அரசியல்வாதிகளுக்கு கூடுதலான சலுகைகள் வழங்க கூடாது என்ற ரீதியில் அமலாக்கத்துறை முன்வைத்த வாதங்களை நாங்கள் ஏற்க மறுக்கிறோம்

7குறிப்பாக இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து ஆராயும் போதெல்லாம் நீதிமன்றங்கள் எப்போதும் சூழல் குறித்த தனித்தன்மைகளை கருத்தில் கொள்கின்றன. அத்தகைய சூழலை புறக்கணிப்பது தவறானதாக மாறிவிடும்.

ஏற்கனவே மற்ற சில வழக்குகளிலும் இப்படி நீதிமன்றங்கள் ஆராய்ந்து இருக்கிறது.
8 அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநிலத்தின் முதல்வராகவும் தேசிய கட்சியின் தலைவராகவும் இருக்கின்றார். அவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

9 ஆனால் அதே நேரத்தில் அவர் இன்னும் குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை .அவருக்கு எதிராக கடந்த காலங்களிலும் எந்த விதமான குற்றச்சாட்டுகளும் சொல்லப்படவில்லை.

10 கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் முதல் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருவதையும் நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம். கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிரான விவகாரத்தையும் நாங்கள் தொடர்ந்து விசாரிக்க போகிறோம். எனவே மேற்கூறிய காரணங்களை சுட்டிக்காட்டி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதாக உத்தரவில் மிகத் தெளிவாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்

எடுபடாத வாதங்கள்
கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோதும், அதனை கண்டு கொள்ளாத நீதிபதிகள் அமலாக்கத்துறையிடம் கிடுக்கிபிடி கேள்விகளை எழுப்பினர். ஆனால் ஒன்றுக்கு கூட அவர்களது தரப்பில் இருந்து சரியான காரணங்களை கூற முடியாமல் திணறினர். இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவலுக்கு எதிரான அமலாக்கத்துறையின் வாதங்கள் எடுபடாத ஒன்றாக அமைந்து விட்டது என்பது மட்டுமில்லாமல், நீதிபதிகள் அதனை நிராகரித்தும் உள்ளனர்.

இடைக்கால ஜாமீன் ஏன்? நீதிபதிகள் விளக்கம்
இந்த விவகாரத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், தேர்தலுக்கு வெகு சமீபத்தில்தான் அவரை கைது செய்துள்ளீர்கள். அது மட்டுமன்றி இந்த வழக்கின் விசாரணை மேலும் நீடிக்கும் என்று தெரிகிறது. ஆனால் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. எனவே இந்த காரணங்களை கருத்தில் கொண்டும், அதேபோன்று வரும் 18ம் தேதியிலிருந்து உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை துவங்க உள்ளதையும் அடிப்படையாக கொண்டு தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தலைவர்கள் வரவேற்பு
பவன் கேரா(காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்): அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் உரிய நீதி கிடைக்கும் என நம்புகிறோம் ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு, மோடி முன்னாள் பிரதமரான பிறகு, சபர்மதி ஆசிரமத்தில் அமர்ந்து சுயபரிசோதனை செய்ய போதுமான நேரம் கிடைக்கும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்: அதிகார துஷ்பிரயோகம் மூலம் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் பாஜவின் மறைமுக முயற்சிகளுக்கு உறுதியான பதில் இந்த தீர்ப்பு வரவிருக்கும் மக்களவைத் தேர்தலின் முடிவை வடிவமைக்கும்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: முதல்வர் கெஜ்ரிவால் ஜாமீன் பெற்றிருப்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போதைய தேர்தல் சூழலில் இது மிகவும் உதவியாக இருக்கும்.

என்சிபி (எஸ்பி) தலைவர் சரத்பவார்: டெல்லி முதல்வருக்கு வழங்கிய ஜாமீன் உத்தரவை வரவேற்கிறேன். ஜனநாயகத்தை பின்தொடர்வதில் இந்தியா உறுதியாக உள்ளது.

சுனிதா கெஜ்ரிவால்: அனுமன் ஜிக்கு ஜே. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. லட்சக்கணக்கான மக்களின் பிரார்த்தனை மற்றும் ஆசிர்வாதம். அனைவருக்கும் மிகுந்த நன்றி என தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான்: உச்சநீதிமன்றத்துக்கு நன்றி. இப்போது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போரில் நாங்கள் இன்னும் வலிமையுடன் போராடுவோம்.

கல்பனா சோரன்(ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) : இந்த நாடு அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தால் நடத்தப்படுகிறது என்பதை சர்வாதிகார சக்திகளுக்குக் காட்ட வேண்டிய நேரம் இது.

சிவசேனா (உத்தவ் பிரிவு) ஆதித்யா தாக்கரே: நாட்டில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கெஜ்ரிவாலுக்கு நீதியும் நிவாரணமும் கிடைத்திருப்பது மாற்றத்தின் மிகப்பெரிய அறிகுறியாகும்.

The post அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Supreme Court ,NEW DELHI ,ALCOHOL POLICY ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணிக்கு கெஜ்ரிவால் பிரசாரம்