×
Saravana Stores

கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன்.. பிரதமர் மோடி, ஒன்றிய அரசு, ED முகங்களில் விழுந்த அறை என அரசியல் தலைவர்கள் விமர்சனம்!!

டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பி உற்சாகமாக உள்ளனர்.மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி : கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் உண்மை வென்றுள்ளது. சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்ட நாங்கள் இயக்கத்தை தொடங்கி உள்ளோம். சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வருவதன் மூலம் சர்வாதிகாரத்துக்கு எதிரான இயக்கம் வலுப்பெறும். வாக்கின் சக்தி மூலம் சர்வாதிகாரத்தை தோற்கடிக்க வேண்டியது மக்களின் பொறுப்பு.

டெல்லி அமைச்சர் கோபால்ராய் : நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் நேசிக்கும் அனைவருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளித்துள்ளது. டெல்லி மட்டுமின்றி இந்த நாடே மகிழ்ச்சியில் திளைக்கிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி : அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது மிகுந்த உதவியாக இருக்கும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்ற உத்தரவை காங்கிரஸ் வரவேற்கிறது.ஹேமந்த் சோரனுக்கும் உரிய நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.ஜூன் 4-க்குப் பிறகு மோடி, தான் எப்படிப்பட்ட அரசியலில் ஈடுபட்டோம் என்பது பற்றி ஆத்ம பரிசோதனை செய்ய நேரம்.

ஆதித்ய தாக்கரே : சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக காற்று திசை மாற்றி அடிப்பதன் பெரிய அடையாளமே உச்சநீதிமன்ற தீர்ப்பு. நாட்டில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நீதியும் நிவாரணமும் பெறுவது மாற்றத்தின் மிகப்பெரிய அறிகுறி. அரவிந்த் கெஜ்ரிவால் உண்மையைப் பேசுகிறார்; அது பாஜகவுக்கு பிடிக்காது. நமது அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்போம்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் : ஜனநாயகத்தை பின்பற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது.

இந்திய கம்யூ. எம்.பி. பினய் விஸ்வம் : உச்சநீதிமன்ற தீர்ப்பு, மோடி முகத்திலும் பாஜக அரசின் முகத்திலும் விழுந்த அறை. பல மாதங்களாக டெல்லி முதலமைச்சரின் பெயரை களங்கப்படுத்த பாஜக அரசு முயற்சி செய்தது. நாட்டின் ஜனநாயக சக்திகள் அனைத்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் இண்டியா கூட்டணி புதிய வேகம் பெறும். உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, பாஜகவின் சர்வாதிகார அரசியலுக்கு பெரும் பின்னடைவு.

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பிருந்தா காரத் : உச்சநீதிமன்ற தீர்ப்பு ED, ஒன்றிய அரசின் முகங்களில் விழுந்த அறை. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ED-யை ஓர் ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்தி வந்தது.

The post கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன்.. பிரதமர் மோடி, ஒன்றிய அரசு, ED முகங்களில் விழுந்த அறை என அரசியல் தலைவர்கள் விமர்சனம்!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Kejriwal ,Modi ,EU Government ,ED ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Atmi Party ,Jamin ,PM ,Dinakaran ,
× RELATED நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய...