தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையிலிருந்து பெட்டமுகிலாளம் மலை கிராமத்திற்கு, 36ம் நம்பர் அரசு டவுன் பஸ், 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. அய்யூர் வனப்பகுதியில் சாமி ஏரி அருகே சென்ற போது, சாலையின் நடுவே காட்டு யானை ஒன்று சாவகாசமாக நின்றுள்ளது. அதனை கண்டு திடுக்கிட்ட டிரைவர் தீபக்குமார், சடன் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தியுள்ளார்.
ஆனால், அந்த யானை அங்கிருந்து செல்லாமல், தொடர்ந்து உலாவிக் கொண்டிருந்தது. நடுரோட்டில் நின்றிருந்த யானையை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், செய்வதறியாது திகைத்தனர். அப்போது, திடீரென அந்த யானை ஆக்ரோஷத்துடன் பஸ்சை நோக்கி பாய்ந்து வந்தது. இதனால், பயணிகள் பீதியில் உறைந்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத டிரைவர், யானையிடமிருந்து பயணிகளை காப்பாற்றும் விதமாக, பஸ்சை பின்னோக்கி ரிவர்சில் இயக்கினார். அபாயகரமான மலைப்பாதையில், சுமார் அரை கி.மீ., தொலைவிற்கு பஸ்சை பின்னோக்கி மிகவும் சாமர்த்தியமாக ஓட்டினார். அந்த யானையும் விடாமல் பஸ்சை துரத்தி வந்ததால், பயணிகள் கத்தி கூச்சலிட்டனர்.
ஒரு கட்டத்தில் சாமி ஏரி குறுக்கிட்டது. ஏரியில் தண்ணீரை பார்த்ததும், அந்த யானையின் கவனம் திசை திரும்பியது. பின்னர், பஸ்சை துரத்திய களைப்பில், தாக சாந்திக்காக ஏரியை நோக்கி ஓட்டம் பிடித்தது. இதனால், பஸ்சில் இருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனை தொடர்ந்து, கியர் மாற்றி மின்னல் வேகத்தில் பெட்டமுகிலாளம் மலை கிராமம் நோக்கி, டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்றார். அரசு பஸ்சை மலைப்பாதையில் சுமார் அரை கி.மீ., தொலைவிற்கு யானை துரத்திய காட்சியை, பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post மலைப்பாதையில் ஆவேசமாக அரசு பஸ்சை துரத்திய யானை ரிவர்ஸ் எடுத்து பயணிகளை காப்பாற்றிய டிரைவர் appeared first on Dinakaran.