சென்னை: பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6ம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவ-மாணவிகள் எழுதிய பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 91.55 சதவீதம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.55 ஆக அதிகரித்துள்ளது. தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எப்போதும் போல மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதன்படி, மாணவர்கள் 3,96,152 பேரும், மாணவிகள் 4,22,591 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தநிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், வாழ்த்து தெரிவித்து விரைவில் சந்திப்போம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். விரைவில் நாம் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் பரிசுகளை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post விரைவில் நாம் சந்திப்போம்.! 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து appeared first on Dinakaran.