*டிரைவருக்கு தீவிர சிகிச்சை
பாப்பாரப்பட்டி : பாப்பாரப்பட்டி அருகே வைக்கோல் லோடு ஏற்றிவந்த மினி லாரி, பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பலியானார். படுகாயமடைந்த டிரைவருக்கு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் (53), டிரைவர் மற்றும் வைக்கோல் வியாபாரி. இவர் நெல் அறுவடை நடைபெறும் இடங்களில், மொத்தமாக வைக்கோலை வாங்கி, உருளைகளாக கட்டி, மினி லாரியில் எடுத்து வந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விற்பனை செய்து செய்து வருகிறார். நேற்று முன்தினம், பாண்டுரங்கன் தனது வாகனத்தில் வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு, பென்னாகரத்தில் இருந்து பவளந்தூர் சாலையில் சென்றுள்ளார். மினி லாரியின் பின்புறம், வைக்கோல் பாரத்தின் மீது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஓலப்பட்டி கிராமத்தை பரமசிவம் (56) என்ற தொழிலாளி அமர்ந்து சென்றுள்ளார்.
பாப்பாரப்பட்டி அடுத்த அட்டப்பள்ளம் என்ற பகுதியில், நேற்று அதிகாலை சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தாறுமாறாக ஓடிய மினிலாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மினி லாரியின் முன்பக்க கேபின் நெறுங்கியது. வைக்கோல் கட்டுகள் உருண்டு ஓடியது. விபத்தில் டிரைவர் பாண்டுரங்கன் மற்றும் பின்னால் மினி லாரியின் வைக்கோல் கட்டுகளின் மீது அமர்ந்து வந்த பரமசிவம் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக, இருவரும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பரமசிவம், சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் பாண்டுரங்கன் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த பென்னாகரம் போலீசார், பரமசிவம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post பாப்பாரப்பட்டி அருகே மினிலாரி பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.