×
Saravana Stores

ஊட்டியில் கல்லூரி கனவு-2024 விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊட்டி : நீலகிாி மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை ஆகியவை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பு பயின்று உயர்கல்விக்காக கல்லூரி செல்ல வேண்டியுள்ள மாணவர்களின் கனவை நிறைவு செய்ய துணை புரியும் நோக்கில் கல்லூரி கனவு-2024 என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று ஊட்டியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் கீதா வரவேற்றார். கூடுதல் ஆட்சியர் கௌசிக், கூடலூர் ஆர்டிஓ செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இது குறித்து வன அலுவலர் (பயிற்சி) அரவிந்த் பேசுகையில், ‘‘கல்வி ஒன்றே சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாக உள்ளது. பள்ளிகளில் மேல்நிலை கல்வியை முடித்துள்ள நீங்கள், இதற்கு பிறகு என்ன செய்ய போகிறோம் என்பது தான் முக்கியமானது. என்னவாக ஆக போகிறோம் என்பதை முடிவு செய்து அதனை நோக்கி முன்னேறுங்கள். அரசு பள்ளியில் பயின்ற மற்றும் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் ஆங்கிலம் கற்று கொள்ளுங்கள். ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளதால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். போட்டி ேதர்வுகளை எதிர்கொள்ள ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அவசியம். பட்டப்படிப்பு பயின்றவுடன் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி படிப்பு முடித்து உயர்கல்வி பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு உயர் கல்விக்கான வாய்ப்புகள் குறித்தும், பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல வகையான விவர ஆலோசனைகள் வழங்குவதற்காக \\”நான் முதல்வன்\\” திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

பல்வேறு படிப்புகள் குறித்து அவ்வப்போதைய சமீபத்திய தகவல்களையும், தொழில் துறைகளுக்கு தேவையான குறிப்பிட்ட திறன்கள் தொடர்பான தகவல்கள் குறித்தும் கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து விவரங்களையும் வழங்குவதே \\”நான் முதல்வன்\\” திட்டத்தின் நோக்கமாகும். இது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கை லட்சியங்களை அடையும் வகையில், தங்களுக்கு விருப்பமான துறையில் பயிற்சி பெற உதவுகிறது.

தொழில்துறையில் தற்போதுள்ள பணியிட இடைவெளிகளை நிரப்பக்கூடிய திறன் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கும் வகையில் பல்வேறு திறன் பயிற்சிகளை அவர்களுக்கு அளிப்பதற்கான ஆற்றல் மிகு பயிற்றுனர்களை அடையாளம் காண்பதும் இத்திட்டத்தின் குறிக்கோளாகும். இந்த முதன்மை திட்டத்தின் மூலமாக மாணவர்கள் பயிற்சி பெற முடியும். தங்களுடைய திறன்களுக்கு ஏற்ப அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதையும் இத்திட்டம் உறுதி செய்கிறது. மாநில கல்வி நிறுவனங்களில், மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும். இதனை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தி நல்ல முறையில் உயர்கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, \\”நான் முதல்வன் கல்லூரி கனவு\\” குறித்த கையேடுகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மாவட்ட வன அலுவலர் (பயிற்சி) அரவிந்த், உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், கூடலூர் ஆர்டிஓ செந்தில் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர்கள் பார்த்தசாரதி (தனியார் பள்ளிகள்), நந்தகுமார் (இடைநிலை) மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், உட்பட மாணவ, மாணவியர்கள், பலர் கலந்து கொண்டனர்.

The post ஊட்டியில் கல்லூரி கனவு-2024 விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri ,Na Mutuvan ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED மழையால் அழுகியது: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் அகற்றம்