×
Saravana Stores

தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு நெல் கொள்முதல் செய்வதற்கு விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் மறியல் போராட்டம்

வந்தவாசி : வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சேத்துப்பட்டு, மழையூர், வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 7 வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். இதில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளுக்கு நேற்று வரை பணம் கொடுக்காமல் ₹1.80 கோடி விவசாயிகளுக்கு வழங்காமல் நிலுவை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் கண்காணிப்பாளர் குமார் வியாபாரிகளுக்கு பணம் செலுத்த வேண்டி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் வியாபாரிகள் நேற்று தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் செய்ய வரவில்லை. 77 விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்ததால், ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் நெல் முட்டைகளை எடையிட்டுள்ளார். இதில் 1700 நெல் மூட்டைகள் எடை போடப்பட்டு அதற்குரிய விலை போடாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மழையூர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்த தேசூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்தனர். அப்போது ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு வியாபாரிகள் விவசாயிகளுக்கு இதுவரை பணம் போடாததால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்ய வரவில்லை. அதனால்தான் விவசாயிகளின் நெல் முட்டைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எடை போடும் உரிமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு உள்ளன. ஆனால் விலை நிர்ணயம் உரிமை வியாபாரிகளிடம் தான் உள்ளது. வியாபாரிகள் வராமல் எப்படி விலை நிர்ணயம் செய்ய முடியும். ஆகவே வியாபாரிகளை வர வைக்க ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும். ஆகவே எடை போட்டுள்ள நெல் மூட்டைகள் இங்கேயே இருக்கும்.

கோடை மழையில் சேதமடையாத வகையில் தார்ப்பாய் மூலம் மூட்டைகளை மூடிக்கொள்ள வேண்டும் என விவசாயிகளை சமரசம் செய்தார். இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் முகப்பில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது அதில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை வைக்க போதுமான இடம் இல்லாததால், 3 நாட்களுக்கு விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாம் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக நெல் மூட்டைகளின் வரத்து அதிகம் காணப்படுவதால் குடோனில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க இடம் இல்லாத காரணத்தால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் அனைத்தும் வெட்ட வெளியில் தரையில் வைக்கப்பட்டுள்ளது. கோடை மழை பெய்தால் அனைத்து நெல் மூட்டைகளும் தண்ணீரில் நனைந்து வீணாகும் நிலை ஏற்படும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் குமாரிடம் கேட்டபோது, ‘வளாகத்தில் உள்ள குடோன்களில் இடமில்லாத காரணத்தால் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகளை வெட்ட வெளியில் தரையில் வைத்துள்ளனர். மழையில் நனையாமல் இதனை பாதுகாக்க தார்ப்பாய் போட்டு மூடி வைக்கவும், விவசாயிகளின் பாக்கி பணம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை கருதி 3 நாட்களுக்கு நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வர வேண்டாம்’ என்றார்.

The post தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு நெல் கொள்முதல் செய்வதற்கு விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tesur ,Vandavasi ,Desoor ,Marishyur ,Dinakaran ,
× RELATED கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு...