*கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு நடத்தினார்
*ஜிபிஎஸ் கருவி அவசியம்: அதிக வேகம் இயக்கினால் பறிமுதல்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 129 பள்ளிகளைச் சேர்ந்த 730 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அப்போது, வாகனங்களின் தரம், இயக்கும் நிலையில் உள்ளதா, விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா, கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதா, காமிரா செயல்படுகிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்கள், அவற்றை நிவர்த்தி செய்த பிறகு மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதன் பிறகே இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், திருவண்ணாமலை எஸ்பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் நடந்த பள்ளி வாகனங்கள் ஆய்வுப் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். அப்போது, வாகனங்களில் அவசரகால கதவுகள் பயன்பாட்டில் உள்ளதா, அவசர நேரத்தில் எளிதில் திறக்க முடிகிறதா என சோதனை செய்தார். வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிரா பயன்பாட்டில் உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.
பள்ளிக்குழந்தைகள் செல்லும் பேருந்துகளை பெற்றோர்கள் கண்காணிப்பதற்காக ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். விபத்துக்களில் ஏற்படும் காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்குவதற்கு முதலுதவி மருந்துப் பெட்டி முறையாக பராமரிக்கப்பட வேண்டும், தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக தடுக்கும் விதமாக தீத்தடுப்பு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்ததாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 129 பள்ளிகளைச் சேர்ந்த 730 வாகனங்களின் தரம் ஆய்வு செய்யப்படுகிறது. ஒருசில வாகனங்களில் முதலுதவிப் பெட்டி பராமரிக்கப்படவில்லை. எனவே, அவற்றை சரி செய்ய உத்தரவிட்டிருக்கிறோம். குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்கள், மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.
தணிக்கை சான்று பெறாத வாகனங்கள், தொடர்ந்து இயக்க அனுமதியில்லை. பள்ளி குழந்தைகளுடன் செல்லும்போது 50 கிமீ வேகத்துக்கு அதிகமாக சென்றால், வாகனம் பறிமுதல் செய்வதோடு, உரிமம் ரத்து செய்யப்படும். வாகனங்களில், அவசரகால கதவுகள் சரியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
அதைத்தொடர்ந்து, பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு, அவசர கால சிகிச்சை அளிப்பது தொடர்பாக 108 ஆம்புலனஸ் மூலமாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தீயணைப்புத்துறையின் மூலமாக செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.ஆய்வின்போது, எஸ்பி கார்த்திகேயன், ஏடிஎஸ்பி பழனி, முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, ஆர்டிஓ மந்தாகினி, வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் 730 பள்ளி வாகனங்களின் தரம் தணிக்கை appeared first on Dinakaran.