*புதியதாக நிறுவும் பணிகள் தீவிரம்
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் 18 இடங்களில் தானியங்கி மழைமானி நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் மழையளவு அளவீடு செய்யும் இடங்கள் எண்ணிக்கை 44 ஆக உயரும். தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரு பருவ காலங்களிலும் குமரி மாவட்டத்தில் மழை பொழிவு காணப்படுகிறது.
பெரும்பாலும் ஆண்டு முழுவதும் அனைத்து மாதங்களிலும் மழை காணப்படும். மழை பொழிவை அளவீடு செய்ய மாவட்டம் முழுவதும் 26 இடங்களில் மழை மானிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பல்வேறு இடங்களில் மழை மானிகள் இல்லை என்ற குறைபாடும் இருந்து வருகிறது.
இந்தநிலையில் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் தானியங்கி மழை மானிகளை பொருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் உட்பட 18 இடங்களில் தானியங்கி மழைமானிகள் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பிர்கா என்று அழைக்கப்படுகின்ற குறுவட்டத்திற்கு ஒரு தானியங்கி மழைமானி என்ற அளவில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தானியங்கி மழை மானி பொருத்தப்படுவதுடன் இதில் 9 இடங்களில் தானியங்கி காலநிலை பதிவு இயந்திரமும் அமைக்கப்படுவதால் வெப்பநிலை விபரங்களும் தெரியவரும். குறிப்பாக தானியங்கி காலநிலை பதிவு இயந்திரம் வாயிலாக மழையளவு, வானிலை முன் அறிவிப்பு, காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை உள்ளிட்ட விபரங்களும் கிடைக்கும். தற்போதுள்ள மழைமானிகள் வாயிலாக 2 மணி நேரத்திற்கு ஒருமுறை மழையளவு கணக்கிடப்படுகிறது.
மேலும் அதிக அளவு மழை பொழிவு ஏற்படும்போது மழைமானிகளில் உள்ள குடுவை போன்ற அமைப்பு நிரம்பி வழியும். இதனால் மழையளவு துல்லியமாக கணக்கிடுவதில் சிக்கல்கள் உள்ளது. தற்போதுள்ள தானியங்கி மழைமானியின் வாயிலாக இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 18 இடங்களிலும் கட்டுமானம் சார்ந்த பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது கருவிகள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெள்ள பாதிப்பு தணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வறட்சி நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும் தானியங்கி மழைமானிகள் உதவும். கிராமப்புறங்களில் குறுவட்ட ஆய்வாளர்களுக்கு இந்த மையங்களை கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலக பகுதியில் நிறுவப்பட்டுள்ள நிலையங்களுக்கு தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) ஆகியோர் பொறுப்பு அலுவலராக செயல்படுவர்.
மேலும் இந்த நிலையங்கள் அமையப்பெற்றுள்ள இடம் தொடர்பான விபரம் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கும் தெரிவிக்கப்பட்டு கண்காணிக்க தெரிவிக்கப்படும். இதன் தரவுகள் மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவுக்கு கிடைக்கப்பெறும். அத்துடன் தரவுகள் செயற்கைகோள் மூலமாக பெறப்பட்டு இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கும் அனுப்பப்பட்டு அம்மையம் மூலம் வானிலை தகவல்கள் உடனுக்குடன் பெறப்படும்.
அதன் மூலம் பேரிடர் மேலாண்மையில் துரிதமாக செயல்பட்டு பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் எதிர்காலத்தில் துரிதமாக மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார். இதன் மூலம் குமரி மாவட்டத்தில் மழை அளவு பதிவு செய்யும் மையங்கள் எண்ணிக்கை 44 ஆக உயருகிறது.
* தமிழ்நாடு முழுவதும் பெய்யும் மழையின் அளவை துல்லியமாக அறியும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் புதியதாக தானியங்கி மழைமானி நிலையங்கள் (ஆட்டோமேட்டிக் ரெயின்கேஜ் ஸ்டேஷன்) மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் (ஆட்டோமேட்டிக் வெதர் ஸ்டேஷன்) அமைக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* தானியங்கி மழைமானி நிலையம் அமைக்கப்பட்டு அந்த இடத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. *மழைமானி நிலையம் அமைக்கப்படும் இடம் திறந்தவெளியாக இருக்க வேண்டும், சுற்றி பெரிய கட்டிடங்கள் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களும் உறுதி செய்யப்படுகிறது.
* மழையளவு கணக்கெடுத்து தெரிவிக்கும் கருவி, அதற்கான சென்சார், இதற்காக தேவைப்படும் மின்சாரத்திற்காக சோலார் பேனல் வாயிலாக மின் இணைப்பு வழங்கப்பட்டு இந்த மழை மானி நிலையம் செயல்படும்.
தற்போதுள்ள 26 இடங்கள்
குமரி மாவட்டத்தில் தற்போது 26 இடங்களில் மழை மானிகள் உள்ளன. இதில் 22 பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும், ஒன்று நாகர்கோவில் மாநகராட்சி, 3 வருவாய் துறை கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது. பூதப்பாண்டி, சிற்றார்-1, களியல், கன்னிமார், கொட்டாரம், குழித்துறை, மயிலாடி, நாகர்கோவில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, புத்தன் அணை, சிவலோகம், சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணியல், பாலமோர், மாம்பழத்துறையாறு, திற்பரப்பு, ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடையாமடை, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை, ஆனைக்கிடங்கு, முக்கடல் அணை ஆகும்.
குமரியில் 18 இடங்கள் எவை?
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, தர்மபுரம் வடக்கு, சுசீந்திரம், நாகர்கோவில், தோவாளை, பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், செண்பகராமன்புதூர், குளச்சல் பி, ஆளூர் பி, கல்லுக்கூட்டம், குமாரபுரம், ஆளூர், முன்சிறை, செறுகோல், தும்பக்கோடு, இடைக்கோடு, அருமனை ஆகிய 18 வருவாய் கிராமங்களில் அரசு புறம்போக்கு பகுதிகள், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புதியதாக தானியங்கி வானிலை மையம் அமைக்கப்படுகிறது.
The post கலெக்டர் அலுவலக வளாகம் உட்பட குமரியில் 18 இடங்களில் தானியங்கி மழைமானி appeared first on Dinakaran.