×

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பசுமை நிழற்பந்தல்

*பொதுப்பணித்துறை சார்பில் ஏற்பாடு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி, கோடை காலங்களில் எவ்வாறு நாம் செயல்பட வேண்டும் என்றும், காலை 10 மணிக்கு மேல் மாலை 4 மணிக்குள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், வயது முதிர்ந்தவர்கள் அனைவரும் வீட்டிலே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்கல் நிழற்பந்தல் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் பசுமை நிறைவான நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனி கூறுகையில், ‘ தமிழக அரசு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் நிழற்பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் திருப்பத்தூர் பகுதியில் ஜின்னா ரோடு சந்திப்பு, பஸ் நிலையம் பகுதி, புதுப்பேட்டை ரோடு, சேலம் கூட்ரோடு சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இந்த நிழற்பந்தல் பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆம்பூர், வாணியம்பாடியில் நியூடவுன் ரயில்வே மேம்பாலம் அருகே, சி.எல். சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்டத்தில் அதிகம் மக்கள் கூடும் பகுதிகளில் இந்த நிழல் பந்தல் அமைக்கப்படும்’ என்றார்.

The post திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பசுமை நிழற்பந்தல் appeared first on Dinakaran.

Tags : Tirupathur district ,Public Works Department ,Tirupathur ,Tirupattur district ,
× RELATED வெவ்வெறு மதம் என்பதால் பெற்றோர்...