×
Saravana Stores

உங்களது பாதைக்கு வழிகாட்ட நான் முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன : மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றுள்ளது. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது. இதனிடையே தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணை தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2ம் தேதி மறுதேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த நிலையில் மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்,”மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! மாணவச் செல்வங்களே…உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்! குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! மேல்நிலைக் கல்வி – தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட #நான்_முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்!,” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்,”தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.பள்ளிக்கல்வியின் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நீங்கள், தங்களுக்கு விருப்பமான கல்லூரிப் படிப்பை சாத்தியப்படுத்தும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து, நன்கு படித்து 12ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”இவ்வாறு தெரிவித்தார்.

The post உங்களது பாதைக்கு வழிகாட்ட நான் முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன : மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. ,Stalin ,Chennai ,Chief Minister MLA ,K. Stalin ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நாமக்கல்லில் கலைஞர் சிலை அமைவது மிக...