×
Saravana Stores

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது.! தீவிரமாகும் விசாரணை

சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி இருந்த மற்றுமொரு தொழிலாளியின் உடல் 10 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது. சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சரவணன்(55). இவர் செங்கமலப்பட்டி அருகே நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) உரிமம் பெற்று சுதர்சன் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட அறைகளில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது, மற்றொரு 7 அறைகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 உயிரிழந்தனர். இதில் ஒரு தொழிலாளியின் உடல் பட்டாசு ஆலையில் இருந்து 100 மீ தூரத்தில் இருந்து மீட்கப்பட்டது. காயமடைந்த 11 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில், 3 பேர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். வெடி விபத்தில் ஒரு அறையில் தொடர்ந்து புகை வந்து கொண்டே இருந்ததால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது. மதியம் 2 மணிக்கு வெடி விபத்து நடந்த நிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு மீட்பு பணிகள் நடந்தது. இரவு 9 மணி அளவில் இடிபாடுகளில் சிக்கி இருந்த தொழிலாளி அழகர்சாமியின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது.

அந்த கட்டிடத்தில் மேலும் இருவர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், மேலாளர், போர்மேன் மற்றும் மாலையை லீசுக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கீழதிருத்தங்கல் பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் சுரேஷ்குமாரை காவல்துறை கைது செய்தது. அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணனுக்கு போலீஸ் தேடி வருகின்றனர்.

The post சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது.! தீவிரமாகும் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Supervisor ,Suresh Kumar ,Sivakasi fireworks plant ,Sivakasi ,Chengamalapatti ,Dinakaran ,
× RELATED அறந்தாங்கியில் ரத்ததான முகாம்