×
Saravana Stores

போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: கோடை வெப்பம் காரணமாக போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தல்களை மழைக்காலங்களில் பைபர் பந்தல்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை ரிப்பன் மாளிகை சந்திப்பு சிக்னலில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தல் பணியை, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோடை வெயிலின் தாக்கத்தை முன்னிட்டு, பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் வாகன ஓட்டிகளின் நலனுக்காக நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் இதுபோன்ற நிழல் பந்தல்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெயில் காரணமாக, மாநகராட்சி பகுதிகளில் 199 இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி அரசியல் கட்சிகளும் தண்ணீர் பந்தல்களை வைத்துக் கொள்ளலாம். மருத்துவ பணியாளர்களின் மேற்பார்வையில் 299 இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,44,527 பேருக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்பட்டுள்ளது. விருப்பம் தெரிவிக்கும் தன்னார்வ அமைப்புகளின் ஒத்துழைப்புடனும் இதுபோன்ற நிழல் பந்தல்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில், இந்த மேற்கூரைகளை சற்று மாற்றி அமைத்து பைபர் மூலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Commissioner ,Radhakrishnan ,Chennai Ribbon House ,Dinakaran ,
× RELATED திருவாரூர் நகரில் சாலையில் திரியும் மாடுகள் கோ சாலையில் விடப்படும்