* தடுப்பணையில் குளிக்கும் பக்தர்கள்
* தீயணைப்பு வீரர்கள் கண்காணிப்பு
தேனி, மே 10: தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 7ம் தேதி தொடங்கி வருகிற 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக காலை 11 மணிக்கு மேல் கடும் வெயில் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்திருந்தது. இருப்பினும் மாலை 4 மணிக்கு மேல் வருகை அதிகரித்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக மாலை 6 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் கோயில் பகுதி திணறியது. அம்மனிடம் வேண்டுதல்கள் நிறைவேறியதைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், மாவிளக்கு ஏற்றுதல், அங்க பிரதட்சணம் செய்தல், அலகு குத்துதல் என பல்வேறு வகையான நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். தேனி அருகே வயல்பட்டியை சேர்ந்த ராஜகம்பளத்தார் சமுதாயத்தினர் நேற்று திரளாக காவடி, அக்னிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் கோயில் முன்பாக தேவராட்டம் ஆடினர். இதனை பிற பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இதில் ஆண்கள் பலர் பெண் மற்றும் கோமாளி வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதற்கிடையே திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (மே 10) மாலை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் என்பதால் எஸ்.பி சிவபிரசாத் உத்தரவின்பேரில் சுமார் 1300 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் புகழ்பெற்ற வீரபாண்டி தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இன்று மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளும் நிலையில் தேரோட்டம் சிறப்பாக நடக்க உள்ளது. இதற்காக தேனி மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களில் பலரும் கோயில் அருகே உள்ள முல்லை பெரியாற்று தடுப்பணையில் குளித்து மகிழ்கின்றனர்.
தடுப்பணையின் மேற்கு பகுதியில் சில இடங்களில் ஆபத்து மிகுந்த பள்ளங்கள் இருப்பதை அறியாமல், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் குளிப்பதால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து தீயணைப்பு துறை சார்பில் தடுப்பணை பகுதியில் கண்காணிப்பு முகாம் அமைத்துள்ளனர். இதில் தடுப்பணையில் குளிக்க செல்பவர்கள் பாதுகாப்பாக குறிக்க வசதியாக லைப் ஜாக்கெட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பலருக்கும் அவற்றை தீயணைப்புத்துறையினர் வழங்கி பாதுகாப்பாக குளிக்கும்படி அறிவுறுத்துகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் தடுப்பணையில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீரபாண்டி கோயிலில் இன்று தேரோட்டம் appeared first on Dinakaran.