பெரியபாளையம், மே 10: எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஏரிக்கரையின் ஓரத்தில் கிராம தேவதைகளான செல்லி அம்மன் கோயில் மற்றும் செவிட்டு செல்லி அம்மன் கோயில்கள் என 2 கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களில் பாஸ்கர்(48), கோவிந்தன்(70) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துக் கொண்டு கோயில்களை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இதனையடுத்து நேற்று விடியற்காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கோயில்களின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு, திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது கோயில் உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மேலும் உண்டியல்களை அங்குள்ள ஏரியில் வீசிவிட்டு சென்றிருந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கிராம நிர்வாக அதிகாரி கோவிந்தசாமி, அருள் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருவள்ளூரில் இருந்து கைரேகை நிபுணர் வந்து கோயிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து சென்றார். 2 கோயில்களில் மொத்தம் 3 தாலிகள் அம்மன் கழுத்தில் இருந்தது. இவை மொத்தம் ஒன்றரை சவரன் ஆகும். 2 கோயில்களில் கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல்களில் ₹2 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
The post 2 கோயில்களில் நகை பணம் கொள்ளை appeared first on Dinakaran.