சிவகாசி, மே 10: சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் ரூ.1 கோடி மதிப்பில் நடைபாதை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகாசியில் சிறுகுளம் கண்மாய் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கரை பகுதியில் நடைமேடை அமைக்க சிவகாசி நகராட்சி நுாற்றாண்டு சிறப்பு நிதியில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கரை பகுதியில் 840 மீட்டர் நீளம் 2 அடி அகலம் உள்ள நடைமேடை அமைக்கும் வகையிலும் கண்மாய் உள்ளே கரையை ஒட்டி 5 அடி உயரம் சுவர் எழுப்பி நடைமேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. நடைமேடையை சுகாதாரமாக பராமரிக்கும் வகையில் கண்மாய் உள்ளே தடுப்பு வேலிகள் மற்றும் நடைமேடை உள்ளே யாரும் நுழையாதபடி தடுப்பு கம்பிகள் சுற்றிலும் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த பணிகளுக்காக கடந்த 2022ல் பூமிபூஜை போடப்பட்டது. நிர்வாக காரணமாக பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. கவுன்சிலர்களின் தொடர் கோரிக்கை காரணமாக பூமிபூஜை போட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரியில் பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பணிகள் நடைபெற்ற ஒருசில தினங்களில் மீண்டும் பணிகள் தடைபட்டன. இதனால் பொதுமக்கள் மீண்டும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் தற்போது கண்மாய் கரை முழுவதும் மீண்டும் திறந்தவெளி கழிப்பறையாக மாறியதோடு குப்பைகளும் கொட்டப்பட்டு வருகின்றது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி நடை மேடை அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் நடைமேடை அமைக்கும் பணிகள் கிடப்பு: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.