×
Saravana Stores

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை: மகன்கள், நண்பர்களிடம் விடிய விடிய விசாரணை


* 15 கி.மீ. தூரத்திற்கு சிசிடிவி காட்சிகள் ஆய்வு
* வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றமா?

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் அவரது மகன்கள், அவர்களது நண்பர்களிடம் போலீசார் விடியவிடிய விசாரித்து வருகின்றனர். ஜெயக்குமார் வீட்டில் இருந்து 15 கி.மீ.தூரம் வரை பதிவான சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வழக்கில் 7 நாட்களாக மர்மம் விலகாத நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நெல்லை மாவட்டம், திசையன்விளை கரைச்சுத்துபுதூர் பகுதியைச் சேர்ந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங் (60). கடந்த 2ம்தேதி மாயமான அவரை, 4ம் தேதியன்று போலீசார் அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக மீட்டனர். முன்னதாக அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் (28) உவரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவர் எழுதிய மரண வாக்குமூலம் தொடர்பான கடிதங்களையும் போலீசில் ஒப்படைத்தார்.

அதன்பேரில் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உவரி போலீசார் நேற்று ஜெயக்குமாரின் இரண்டு மகன்களிடம் விசாரணை நடத்தினர். இதுவரை ஜெயக்குமார் மகன்களிடம் 7 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவரது இரண்டு மகன்களின் நெருங்கிய நண்பர்கள் 6 பேரிடம் தனிப்படையினர் ரகசிய இடத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய விசாரணை நடத்தினர். நேற்றும் இந்த விசாரணை தொடர்ந்தது. அப்போது, ஜெயக்குமார் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே எங்கள் வீட்டிற்கு 2 மாதத்திற்கு யாரும் வர வேண்டாம் என்று ஜெயக்குமாரின் உறவினர்கள் கேட்டுக் கொண்டதாக மகனின் நண்பர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறிய மேலும் சில தகவல்களின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஜெயக்குமார் கடந்த 2ம்தேதி அன்று நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள குட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு வைத்து தான் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனையறிந்த தனிப்படையினர் குட்டம் பகுதியில் ஜெயக்குமார் சென்ற இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து 2ம் தேதி இரவு அவர், எங்கெல்லாம் சென்றுள்ளார்? என்று விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது வீட்டிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு வரையிலும் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் மரணத்தில் 7வது நாளாக மர்மம் நீடித்து வருகிறது. துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். எனவே, ஜெயக்குமார் கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

கிணற்றில் தடயம் வீச்சா?
ஜெயக்குமார் கொலை தொடர்பாக முக்கியமான தடயங்கள் ஏதேனும் வீட்டின் அருகேயுள்ள 120 அடி ஆழ கிணற்றில் இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் இருந்தது. இதன் காரணமாக நேற்று அந்த கிணற்றிலுள்ள தண்ணீரை முழுவதும் வெளியேற்றி விட்டு அதற்குள் ஏதேனும் தடயம் இருக்கிறதா? என தனிப்படையினர், திசையன்விளை தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆகியோர் தேடினர். ஆனாலும் கிணற்றில் எந்த தடயமும் கிடைக்கவில்லை.

ஜெயக்குமார் கையெழுத்து
மீண்டும் தடயவியல் சோதனை
ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் உள்ளது அவரது கையெழுத்து தானா? என 2வது முறையாக பரிசோதனை நடத்த தனிப்படை போலீசார் தடயவியல் நிபுணர்களிடம் கோரியுள்ளனர். இதனால் அந்த கடிதங்கள் குறித்து நேற்று மீண்டும் 2வது முறையாக தடயவியல் நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். இந்த அறிக்கை வருவதற்கு 2 நாட்கள் ஆகும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

உடல் கண்டெடுத்த பகுதிக்கு
சீல் வைத்து போலீஸ் பாதுகாப்பு
ஜெயக்குமார் அவரது வீட்டருகேயுள்ள தோட்டத்தில் அவரது உடல் எரிந்த நிலையில் கிடந்துள்ளதால், அங்குள்ள தடயங்கள் அழிந்து போகக் கூடாது என்பதற்காக அந்த பகுதி தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது. அங்கும், அவரது வீட்டிலும் ஷிப்டு முறையில் தலா 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவருக்கு தெரிந்த உறவுக்கார பெண்கள் சிலரிடமும் தனிப்படையினர் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 ஆயிரத்து 300 அழைப்புகள்
கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் செல்போன் எண்களில் பதிவான அனைத்து கால் லிஸ்ட்டுகளையும் போலீசார் எடுத்துள்ளனர். இதில் ஒரு வாரத்தில் மட்டும் அவருக்கு மொத்தம் 2,300 அழைப்புகள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் அவரிடம் பேசியவர்கள் யார், யார்? என தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த 2ம்தேதி அன்று அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்துள்ளனர். அவரை போன் செய்து அழைத்தது யார்? என்பது தெரிய வந்துள்ளது. அந்த நபரிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பேட்டரி வாங்கும் புதிய வீடியோ
ஜெயக்குமார் காணாமல் போனதாக கூறப்படும் 2ம் தேதி இரவு திசையன்விளை பஜாரில் உள்ள கடைக்கு சென்ற வீடியோ காட்சி ஏற்கெனவே வெளியானது. போலீசார் கையில் கிடைத்த ஜெயக்குமாரின் கடைசி வீடியோ காட்சி இது தான். இந்நிலையில் மேலும் ஒரு வீடியோ காட்சி போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதாவது, திசையன்விளை பஜாருக்கு சென்ற ெஜயக்குமார் கடிகாரம், டார்ச் லைட் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் சிறியரக பேட்டரிகளை வாங்கியுள்ளார். இந்த சிசிடிவி காட்சிகளில் எவ்வித பதற்றமோ, படபடப்போ இல்லாமல் ஜெயக்குமார் இருப்பது தெரியவந்துள்ளது.

ஜெயக்குமார் மரணத்தில் எழும் கேள்விகள்
* உயிருக்கு பலரால் ஆபத்து இருப்பதாக மரண வாக்குமூலம் எழுதி உள்ள ஜெயக்குமார் பாதுகாப்பிற்காக நெருக்கமானவர்கள் யாரையும் அழைத்துச் செல்லாமல் 2ம் தேதி இரவு திசையன்விளை, குட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு காரில் தனியாக சென்றது எப்படி? அதுவும் திசையன்விளை பஜாரில் இரவு 10 மணிக்கு மேல் கடைக்கு சென்ற அவர் எந்த பதற்றமும் இல்லாமல் ரிலாக்சாக பேட்டரி செல் வாங்கியுள்ளார். அதன் பிறகு அவர் மாயமாகியுள்ளார்.

* தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில் ஒரு தேசிய கட்சியின் மாவட்ட தலைவரான ஜெயக்குமார், மாவட்ட எஸ்பி, டிஐஜி அல்லது தென்மண்டல ஐஜி உள்ளிட்டவர்களிடம் நேரடியாக சென்று மனு அளித்து பாதுகாப்பு கோரியிருக்கலாம் அல்லது முறையாக விண்ணப்பம் செய்து துப்பாக்கி லைசென்ஸ் பெற்றிருக்கலாம். ஆனால் ஏன் அவர் செய்யவில்லை.

* ஜெயக்குமார் செல்போன்கள் 2ம் தேதி இரவு குட்டம் பகுதியில் வைத்து சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. அங்கு காரில் தனியாக ஜெயக்குமார் சென்றது ஏன்?. தனது குடும்ப உறுப்பினர்களுக்கு கூட தெரியாத ரகசியங்கள், தனது உதவியாளர் வேலவனுக்கு தெரியும் என்ற போது அவர் தனது உயிருக்கு ஆபத்து குறித்தும், இறுதியாக குட்டத்திற்கு சென்றதையும் ஏன் அவரிடம் தெரிவிக்கவில்லை.

* ஜெயக்குமாரின் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தின் கதவுகள் எப்போதும் இரவு நேரங்களில் பூட்டப்பட்டிருக்கும். ஆனால் சம்பவம் நடந்த 2ம் தேதி பூட்டாமல் கேட் திறந்து கிடந்துள்ளது. எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் உடலில் சுற்றப்பட்டிருந்த எரிந்து போன பாய் எங்கிருந்து வந்தது?

* 2ம் தேதி ஜெயக்குமார் காணாமல் போன நிலையில், 3ம் தேதி இரவு அவரது மகன் உவரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளார். வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் கேட்டிற்கு மிக அருகில் உடல் கிடந்த போதிலும், காணாமல் போன ஜெயக்குமாரை யாரும் தோட்டத்திற்கு தேடிச் செல்லவில்லையா? 2 நாட்கள் யாரும் தோட்டத்தின் பக்கம் செல்லாமல் இருந்தது எப்படி?

The post நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை: மகன்கள், நண்பர்களிடம் விடிய விடிய விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nellai District Congress ,President ,CBCID ,Nellai ,Nellai East District Congress ,Jayakumar ,
× RELATED ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய...