எல்.முருகன் (ஒன்றிய அமைச்சர்): சிவகாசி அருகே, செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த கவலையுற செய்கிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன். வெடி விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து தொடர் கதையாகி வருகிறது. பட்டாசு தயாரிக்கும் தொழிலை மூலதனமாக கொண்டு பணியாற்றி வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமான நடவடிக்கைகளை இனிமேலாவது அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
செல்வப்பெருந்தகை (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்): சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். இத்தகைய வெடிவிபத்து சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதும், அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகின்றன. இதுபோன்ற அதிகாரிகளின் அலட்சியப்போக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து சம்பவங்கள் நடப்பதும், ஏழை தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர் கதையாகி வருகிறது. பட்டாசு ஆலை நிறுவனங்கள் உரிய விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்றாததும், அதனை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தவறுவதுமே விபத்துகளுக்கு முக்கிய காரணம். எனவே, பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட தொடர் விபத்துக்கள் குறித்தும், இதனால் ஏற்பட்டுள்ள மனித உயிரிழப்புகள் குறித்தும் உயர்மட்டக்குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்): செங்கலம்பட்டி பட்டாசு வெடி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். இதுபோன்று பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நடப்பது வாடிக்கையான நிகழ்வாகவே உள்ளது. இதை தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கொடுத்து, வீட்டில் ஒருவருக்கு வேலையும் தரவேண்டும். இனிமேலும் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நடக்காத வண்ணம் அரசு ஆய்வு செய்து விபத்துகளை தடுக்க வேண்டும்.
ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
ஜனாதிபதி திரவுபதி முர்மு விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டின் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பல உயிர்கள் பலியாகியுள்ளதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என கூறி உள்ளார்.
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என கூறி உள்ளார்.
The post தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து உயர்மட்ட குழு விசாரணை: தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.