×

வெப்ப அலை வீசுவதால் மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது: பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

சென்னை: தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்திற்கான வெப்ப அலை குறித்த அறிவிக்கையில், தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்ப பகுதிகளில் மார்ச் முதல் மே வரை அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும், வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை காட்டிலும் அதிகமாக பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து, வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே எனது தலைமையில் பல்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வரும் 16ம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 96.8 முதல் 104 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால், பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

The post வெப்ப அலை வீசுவதால் மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது: பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Chief Secretary ,Shivdas Meena ,India Meteorological Department ,
× RELATED தமிழ்நாட்டில் போதைப்பொருளை...